அம்பத்தூர்: அம்பத்தூரில் ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தை கண்டித்து அதன் ஊழியர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. சென்னை அம்பத்தூரில் உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளன. ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் உணவு பொருட்களை சப்ளை செய்வதற்காக ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள், அம்பத்தூரில் உள்ள நிறுவனம் முன்பு திரண்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனத்தை கண்டித்தும் செல்போன்களை ஆப்செய்தும் கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து ஊழியர்கள் கூறுகையில், “உணவு டெலிவரி தளத்தில் பணிபுரிபவர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும், அவர்களுக்கு வாரம் ஒருமுறை ஊக்கத்தொகை வழங்கப்படுவது வழக்கம்.
தற்போது நிறுவனம் புதிய விதிகளை கொண்டுவந்துள்ளது. அதில், 12 மணி நேர வேலை நேரம் 18 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் ஊக்கத் தொகையும் குறைக்கப்பட்டுள்ளது. ஊக்கத்தொகை குறைத்தது ஒருபுறமிருக்க எவ்வளவு நேரம், எத்தணை ஆர்டர்களுக்கு உணவு டெலிவரி செய்தாலும் குறிப்பிட்ட அளவே ஊதியம் வழங்கப்படுகிறது. குறைவான ஊதியம், ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. எனவே, ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு பழைய நடைமுறையை நிறுவனம் பின்பற்றப்பட வேண்டும்” என்றனர். ஊழியர்களின் பிரச்னை தொடர்பாக நிறுவனர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
உணவு டெலிவரி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவு ஆர்டர்கள் டெலிவரி செய்ய முடியாமல்போனது. இதனால் உணவு ஆர்டர் செய்தவர்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினர். இந்த சம்பவத்தால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு நிலவியது.