டிவி சேனல்களில் வெறுப்பு பேச்சு… உச்சநீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு!

நாட்டில் உள்ள முக்கிய தொலைக்காட்சி செய்தி சேனல்களின் செயல்பாட்டை கவனத்தில் எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், பெரும்பாலான டிவி சேனல்கள் வெறுப்பூட்டும் பேச்சுகளுக்கு இடம் கொடுப்பதாகவும், பின்னர் எந்த தடையும் இல்லாமல் தப்பித்து விடுவதாகவும் புதன்கிழமை கூறியது. நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய நீதிமன்ற பிரிவு, தொலைக்காட்சி சேனல்களின் தொகுப்பாளர்களுக்கு தங்கள் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட விருந்தினர்கள் எல்லை மீறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய முக்கிய கடமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

“நெறியாளரின் பங்கு மிகவும் முக்கியமானது. முக்கிய ஊடகங்கள் அல்லது சமூக ஊடகங்களில், பேச்சுக்கள் கட்டுப்பாடு ஏதும் இல்லாத நிலை உள்ளது. பிரதான தொலைக்காட்சி சேனல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள நிலையில், நெறியாளரின் பங்கு முக்கியமானது. வெறுப்பு பேச்சு நடக்காமல் பார்த்துக் கொள்வது அவர்களின் கடமை” என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஜோசப் குறிப்பிட்டார்.

பேச்சு சுதந்திரம் முக்கியமானது என்றாலும், வெறுப்பு பேச்சுக்களை தொலைக்காட்சியில் அனுமதிக்க முடியாது என்று கூறிய அவர், இங்கிலாந்தில் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு விதிக்கப்பட்ட அதிக அபராதம் குறித்து எடுத்துரைத்தார். மக்கள் மனதில் மஎதுவாக கொல்லும் விஷமாக இருக்கும் வெறுப்பு பேச்சு தொடர்பாக, அரசாங்கம் ஏன் மவுனமான பார்வையாளனாக உள்ளது என்பதை அறிய நீதிமன்றம் விரும்புகிறது என்று நீதிபதி ஜோசப் கேட்டார்.

நாட்டில் நடக்கும் வெறுப்புப் பேச்சு சம்பவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரிக்கையில் இவ்வாறு கூறியுள்ளது. சக்தி வாஹினி மற்றும் தெஹ்சீன் பூனவல்லா ஆகியோரின் தீர்ப்புகளில், வெறுப்பூட்டும் பேச்சைக் கட்டுப்படுத்தும் வகையில், பொதுவான வழிகாட்டுதல்களை மாநிலங்கள் பின்பற்றுவது குறித்த விளக்க அறிக்கையை தயாரிக்குமாறு ஜூலை மாதம் உச்ச நீதிமன்றம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டது குறிப்பிட்டது.

இன்றைய விசாரணையின் போது, ​​வெறுப்புப் பேச்சுக்களால் அரசியல்வாதிகள் அதிகப் பலன் அடைகிறார்கள் என்றும், தொலைக்காட்சி சேனல்கள் அதற்கான மேடையை அவர்களுக்கு வழங்குவதாகவும் நீதிமன்றம் கூறியது.

மனுதாரர்களில் ஒருவரான வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாய், ஒவ்வொரு முறையும் தனிப்பட்ட மீறல்கள் நிகழும்போது நீதிமன்றத்திற்குச் செல்ல தகுதி உள்ளதா என்று கேட்டார். உபாத்யாயாவின் கருத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அதைச் சமாளிக்க ஒரு சிறப்பான வழிமுறை இல்லாவிட்டால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கும் என்று கூறியது.

மேலும் படிக்க | ஹிஜாப் விவகாரம்: கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.