செங்கல்பட்டு: பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தில் 2.80 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் விழா ஏற்பாடுகள் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அருகே நடைபெறவுள்ள பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்ட தொடக்க விழாவில் , தமிழ்நாடு முழுவதும் 360 நாற்றங்கால்களில் வளர்க்கப்பட்ட 2.80 கோடி மரக்கன்றுகள் நடும் விழா 24.09.2022 காலை 11 மணி அளவில் நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் வனப் பரப்பை 33 சதவீதமாக உயர்த்திட, தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் மூலம் நடப்பாண்டு, முதல் கட்டமாக 37 மாவட்டங்களில் உள்ள 360 நாற்றங்கால்கள் மூலம் வளர்க்கப்பட்டுள்ள 2..80 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்து சிறப்பிக்கவுள்ளார்கள். இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றுவருவதை இன்று (21.09.2022) வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள்.
இந்த ஆய்வின்போது, விழாவிற்கு வருகைதரும் விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கான இருக்கை வசதிகள், வாகன நிறுத்துமிடங்கள், ஒரே நேரத்தில் 500 மரக்கன்றுகள் நடுவதற்கான ஏற்பாடுகள், தமிழ்நாடு பசுமை இயக்கம் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி அரங்குகள் அமைவிடம் போன்ற பணிகளை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு இ.ஆ.ப., வனத்துறை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (துறைத் தலைவர்) திரு.சையத் முஜம்மில் அப்பாஸ், இ.வ.ப., வனத்துறை கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர்கள்/ வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநர் சீனிவாஸ் ரா ரெட்டி இ.வ.ப., பசுமை தமிழ்நாடு இயக்கம் இயக்குநர் தீபக் ஸ்ரீவஸ்தவா இ.வ.ப., பசுமை தமிழ்நாடு இயக்கம் கூடுதல் இயக்குநர் வ.ச.ராகுல் இ.வ.ப., வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா துணை இயக்குநர் ஆர்.காஞ்சனா இ.வ.ப., மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு பணிகளின் முன்னேற்றம் குறித்து தெரிவித்தார்கள்.
…………………………………………..சுரேஷ் காளிப்பாண்டி