சென்னை: அஜித்தின் 61வது படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.
துணிவு என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கையில் துப்பாக்கியுடன் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் இருக்கிறார் அஜித்.
இந்நிலையில், விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு பட டைட்டில்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
டைட்டில்களுக்கு தடுமாறும் கோலிவுட்
தமிழ்த் திரைப்படங்களில் கதைக்கு பஞ்சம் என ரசிகர்கள் அடிக்கடி விமர்சிப்பது உண்டு. இப்போது டைட்டில் வைப்பதிலும் அதே பிரச்சினகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே வெற்றிப் பெற்ற தமிழ்ப் படங்களின் பழைய டைட்டில்களை ரைட்ஸ் வாங்கி பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் உச்ச நட்சத்திரங்களும் இருப்பது தான் கொடுமையான விசயம். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தொடங்கப்பட்ட ‘மாவீரன்’ திரைப்படத்தின் டைட்டில் கூட, ரஜினியின் பழைய பட தலைப்பு தான்.
விஜய், அஜித் ரசிகர்கள் ஏமாற்றம்
விஜய் நடித்து வரும் அவரது 66வது படத்தின் தலைப்பு ‘வாரிசு’ என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்நிலையில் தற்போது அஜித்தின் 61வது பட டைட்டில் ‘துணிவு’ என அறிவிப்பு வெளியாகியுள்ளது. வாரிசு, துணிவு என இந்த இரண்டு டைட்டில்களுமே மாஸ் ஹீரோக்களுக்கான படங்களுக்கு செட் ஆகவில்லை என ரசிகர்கள் உள்ளுக்குள் புலம்பி வருகின்றனர். படத்தின் முதல் வெற்றியே டைட்டிலில் இருந்து தான் தொடங்குகிறது. ஆனால், விஜய்யும் அஜித்தும் அதை கண்டுகொள்வதே இல்லை என, அவர்களின் ரசிகர்களே புலம்பி வருகின்றனர்.
பழைய படங்களில் டைட்டிலில் இருந்து பாதி
ரஜினி நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ‘அடுத்த வாரிசு’ படத்தின் டைட்டிலை பாதி சுட்டு, வெறும் ‘வாரிசு’ என விஜய்யின் 66வது படத்துக்கு தலைப்பு வைத்துவிட்டனர். அதேபோல், ஜெய்சங்கரின் ‘துணிவே துணை’ படத்தின் டைட்டிலில் இருந்து முதல் பாதியை தட்டித் தூக்கிய ஹெச் வினோத் டீம், அஜித்தின் 61வது படத்துக்கு ‘துணிவு’ என டைட்டில் வைத்துவிட்டார்கள். இப்படி பழைய படங்களில் இருந்து எதாவது ஒரு டைட்டிலை லவட்டிக் கொண்டு வருவதே இப்போது ட்ரெண்ட் ஆகிவிட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
வழியே இல்லை கொண்டாடி தான் ஆகணும்
விஜய், அஜித், தனுஷ், சூர்யா, சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஒரு படம் தொடங்கியதுமே அதுகுறித்து வெளியாகும் அப்டேட்களை ட்ரெண்ட் செய்துவரும் அவர்கள், டைட்டில், ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் போது இன்னும் கொண்டாட்ட மனநிலைக்கு சென்றுவிடுவார்கள். ஆனால், விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு பட டைட்டில்களை வேறு வழியே இல்லாமல் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. ‘அமர்க்களம்’, ‘தீனா’, ‘மங்காத்தா’ என டைட்டில்களிலேயே மாஸ் காட்டிய அஜித், எப்படி துணிவோடு வரப்போகிறார் என அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.