வத்திராயிருப்பு: சதுரகிரி மலைக்கோயிலில் புரட்டாசி பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு வரும் 23ம்தேதி முதல் 26ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு புரட்டாசி பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு வரும் செப்.23ம் தேதி முதல் 26ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
4 நாட்களிலும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும். 23ம்தேதி பிரதோஷம், 25ம்தேதி மகாளய அமாவாசையை முன்னிட்டு, சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. முகக்கவசம் அணிந்து வரும் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதியில்லை. ஓடையில் இறங்கி குளிக்கக்கூடாது.
இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதியில்லை. அனுமதிக்கப்படும் நாட்களில், மழை பெய்தால் தரிசனத்துக்கு தடை செய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.