திமுக எம்.பி ஆ.ராசா இந்துக்குள் குறித்து பேசியது சர்ச்சையானது. அவருக்கு பாஜகவினர், இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்திவருகின்றனர். மேலும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் வலியுறுத்திவருகின்றனர். இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்து மதத்தை சாந்தவர்கள் மட்டுமல்லாமல், இஸ்லாம் மற்றம் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்கள் எல்லாம் சமூக வலைத்தளதில் இந்த கருத்தை கண்டித்திருப்பதாக கூறிய அண்ணாமலை, இதுபோன்று திமுக தலைவர்கள் பேசுவது தமிழகத்தில் புதிது கிடையாது
வருடத்திற்கு ஒரு முறை திமுகவின் சிறிய தலைவர்கள் இப்படி பேசுவதை தமிழகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. இது புதிதல்ல. ஆனால், ஒவ்வொரு முறையும் ஏன் பேசுகிறார்கள் என்பதுதான் கேள்வி. ஒவ்வொரு முறையும் ஏன் பேசவேண்டும்? இந்து சனாதன தர்மம் என்ற வார்த்தையை இங்கு கொண்டு வந்து அதன் அர்த்தத்தை திரித்து, அது ஏதோ ஆகாத வார்த்தையைப் போல் பிரசாரத்தை மேற்கொண்டு, அதன்மூலம் மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல், ஆ.ராஜா அவர்கள் தான் சொன்ன வாதம் சரிதான் என மறுபடியும் பேசுகிறார். இதன்மூலம் இந்து பெண்களின் மனதை புண்படுத்தும் வகையில் பேசியிருக்கிறார்.
காலங்களை கடந்து அழிவை சந்திக்காத தர்மம் சனாதன தர்மம். அனைத்து மக்களும் எந்தவித நோய்நொடியும் இல்லாமல் இருக்கட்டும், அனைத்து மக்களுக்கும் மோட்சம் கிடைக்கட்டும் என்பது சனாதன தர்மத்தின் மிக முக்கிய குறிக்கோளாக இருக்கிறது. ஆழ்வார்கள், நாயன்மார்களுக்கு தெரியாத ஒரு சனாதன தர்மம அண்ணன் ராஜா அவர்களுக்கு தெரிந்திருக்காது. இந்து சமயத்தில் சனாதன தர்மத்தின்படி எந்த ஒரு சாதிக்கும் உயர் சாதி, கீழ் சாதி என்று கூறுவதற்கு அருகதை கிடையாது என்று மிகப்பெரிய மாற்றத்தைக் கொடுத்த ராமானுஜர் பிறந்த மதம் இது. பிறந்த மண் இது. அதனால்தான் தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தனது கடைசி காலத்தில் ராமானுஜரின் சரித்திரத்தை எழுதினார். அதன்மூலம் தனக்கு மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்திருக்கலாம்.
திமுக தலைவர்கள் தொடர்ந்து ஏன் சர்ச்சை பேச்சு பேசவேண்டும்? காரணம், தமிழக மக்களின் கோபம் எல்லை கடந்து சென்றுவிட்டது என்பது அவர்களுக்கு தெரிந்துவிட்டது. இந்த ஆட்சியில் சாமானிய மக்களுக்கு நல்லது நடக்கவில்லை என்பது திமுக அரசுக்கே தெரியும். இதைப்போன்ற சர்ச்சை பேச்சு மூலமாக மக்களின் கவனத்தை திருப்பி, அதை பேசுபொருளாக நடத்தி காட்டலாம் என திமுக நினைத்தால் அது மாபெரும் தவறு. அரசியல் தரம் தாழ்ந்து ராஜா பேசி வருகிறார். அதன் வெளிப்பாடு தமிழகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கிறது. இதை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் மீது வழக்கு பதிவு செயது உள்ளே அனுப்புவது திமுக அரசின் புதிய வாடிக்கையாக உள்ளது.
உதாரணமாக கோவை மாநகர மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தமராமசாமி, அதற்கு முன்பு கள்ளக்குறிச்சி, கோவில்பட்டி, வேலூரில் பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் எதிர்த்து குரல் கொடுத்ததற்காக தமிழகம் முழுவதும் கைது நடவடிக்கை மேற்கொள்கிறார்கள். காவல்துறையை தடுத்ததாக ஒரு வழக்கு பதிவு செய்கிறார்கள். இவர்கள் பேசிய கருத்துக்கள் மூலமாக சமுதாயத்திற்கிடையே பிரச்னையை உருவாக்குதல் (153 ஐபிசி) என்ற செக்சனில் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். அதாவது, ராஜா அவர்கள் பேசிய கருத்துக்களால் சமுதாயத்திற்கிடையே பிளவு ஏற்படாதாம், அதை கண்டித்து கேட்ட பாஜக தொண்டர்களின் கருத்துக்களால் சமுதாயத்தில் பிளவு ஏற்படும் என்று கூறியிருக்கிறார்கள்” என்றார்.