அதிமுக-வில் இப்போது கொங்கு மண்டலம் வலுவலாக இருக்கலாம். ஆனால் ஜெயலலிதா இருந்தவரை பவர் சென்டராக இருந்தது மன்னார்குடி டீம்தான். அப்போது கொங்கு மண்டலம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் ராவணன்.

சசிகலா சித்தப்பா கருணாகரனின் மருமகன்தான் ராவணன். இவர் தந்தை பிச்சைக்கண்ணும் ஜெயலலிதா குட்புக்கில் இருந்தார். கவுன்சிலர் சீட் முதல் எம்.எல்.ஏ சீட் வரை ராவணன் டிக் அடிப்பவருக்குத்தான் கிடைக்கும்.
இப்போது அதிமுக-வை கட்டி ஆளும் எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், செந்தில் பாலாஜி (முன்னாள் அதிமுக அமைச்சர்) உட்பட பல அமைச்சர்களை உருவாக்கியது ராவணன்தான். அதிமுக-வில் ஒருவரின் எழுச்சி, வீழ்ச்சி இரண்டும் ராவணனின் கையில்தான் என்றளவுக்கு கோலோச்சி கொண்டிருந்தார்.

கோவை சிங்காநல்லூர் பகுதியில்தான் ராவணன் வீடு இருந்தது. இருப்பினும் கொங்கு மண்டலம் முழுவதும் ஆயில் மில் தொடங்கி ஏராளமான தொழில்களில் ஈடுபட்டு வந்தார்.
ஒருகட்டத்தில் கொங்கு மண்டலத்தை கடந்தும் ராவணன் செல்வாக்கு அதிகரித்தது. வளர்மதி, கோகுல இந்திரா, கி.த செல்லப்பாண்டியன் என கொங்கு மண்டலம் தாண்டியும் அமைச்சர்களை உருவாக்கும் கிங் மேக்கராக வலம் வந்தார். ஆனாலும், வெளி உலகில் தலைக்காட்ட மாட்டார்.

ராவணனின் தீவிர விஸ்வாசியாக அவர் வீட்டிலேயே இருந்ததுதான், ஆரம்பக்கட்டத்தில் வேலுமணி வளர்ச்சிக்கு உதவியது. யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல, சசிகலா குடும்பத்தை ஜெயலலிதா ஒட்டுமொத்தமாக ஒதுக்கி வைத்தபோது அதிகம் பாதிக்கப்பட்டதும் ராவணன்தான்.
2012–13 காலகட்டங்களில் ஒப்பந்ததாரரை மிரட்டிப் பணம் பறித்த வழக்கு உட்பட ஏராளமான வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டார். ராவணனுடன் காட்டிய நெருக்கமே வேலுமணிக்கும் அப்போது அமைச்சர் பதவி பறிபோக காரணமாக இருந்தது. அடுத்தடுத்து வழக்குகள் விரட்டவே கோவையிலிருந்து வெளியேறினார். அவர் மகன் அரவிந்த் திருச்சியில் மருத்துவப் படிப்பு பயின்று வருகிறார்.

அவருடன் தங்கியிருந்த ராவணனுக்கு அவ்வபோது உடல்நலக்குறைவும் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் அவர் இன்று மதியம் உயிரிழந்தார். நாளை மதியம் மன்னார்குடி அருகே உள்ள ராதாநரசிம்மபுரத்தில் அவரது இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளன.