திமுகவில் இருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன்… உடல்நிலை தான் உண்மை காரணமா?

சுப்புலட்சுமி ஜெகதீசன்… நேற்றுவரை கொங்கு மண்டலத்தில் திமுகவின் முக்கிய நபர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தனர். கருணாநிதி ஆட்சிக் காலத்தில் எம்பி, எம்எல்ஏவாக இருந்ததுடன், மத்திய, மாநில அரசுகளில் அமைச்சராகவும் வலம் வந்தவர். 2021 இல் வெற்றிப் பெற்றிருந்தால் அநேகமாய் சபாநாயகராக கூட ஆகி இருப்பார். ஆனால் எதிர்பாராத விதமாக, மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளரான டாக்டர் சரஸ்வதியிடம் வெறும் 280 வாக்குகள் வித்தியாசத்தில் தோலவி கண்டார்.

தமது இந்த தோல்விக்கு ஈரோடு தெற்கு திமுக மாவட்ட செயலாளரும், வீட்டு வசதித் துறை அமைச்சருமான முத்துசாமியும் , அவரது ஆதரவாளர்களான மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் குணசேகரன், கொடுமுடி ஒன்றிய செயலாளர் சின்னசாமி ஆகியோர் தான் காரணம் என்றும், இவர்கள் சரியாக தேர்தல் களப்பணி ஆற்றாததால்தான் தான் தோல்வி உற்றதாகவும் பல மாதங்களுக்கு முன்பே கட்சித் தலைமையிடமே பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தாராம்

.

அத்துடன் விரைவில் நடைபெற கட்சியின் உட்கட்சி தேர்தலில் குணசேகரன் மற்றும் சின்னசாமிக்கு மீண்டும் ஒன்றிய செயலாளர் பதவியோ, வேறு எந்த பதவியோ அளிக்கக்கூடாது என்று கண்டிப்பாக சொல்லியிருந்தாராம் அவர்.

அவரது பேச்சுக்கு மரியாதை அளிக்கும் விதமாக கடந்த மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியாகியிருந்த ஈரோடு மாவட்ட திமுக புதிய நிர்வாகிகள் பட்டியலில் அமைச்சர் முத்துசாமியின் ஆதரவாளர்களான குணசேகரன், சின்னசாமியின் பெயர்கள் இடம்பெறாததை அறிந்து அகம் மகிழந்திருந்தாராம் சுப்புலட்சுமி ஜெகதீசன்.

ஆனால் அவரது அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. சில வாரங்கள் இடைவெளியில் மீண்டும் வெளியான மாவட்ட திமுக நிர்வாகிகள் பட்டியலில் குணசேகரன் மற்றும் சின்னசாமி பெயர்கள் இடம்பெற்றிருப்பதை கண்டு அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், தமது பேச்சுக்கு மதிப்பில்லாத இடத்தில் இனி தமக்கு என்ன வேலை என்று எண்ணினாரோ என்னவோ, திமுக துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து மட்டுமின்றி, கட்சியில் இருந்தே ஒட்டுமொத்தமாக விலகுவதாக, திமுக தலைமைக்கு கடந்த மாத இறுதியிலேயே (ஆகஸ்ட் 29) கடிதம் எழுதிவிட்டாராம்.

சுப்புலட்சுமியின் கணவர் ஜெகதீசன் திமுகவை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருவதால் ஏற்கெனவே அப்செட்டில் இருந்துவரும் திமுக தலைமை, சுப்புலட்சுமி ஜெகதீசனின் இந்த பதவி விலகல் கடிதத்தால் மேலும் அப்செட்டாகி உள்ளதாம். தலைவரே எதுக்கு எப்போ இப்படி அப்செட்டாகி இருக்கிறீங்க எல்லாத்தையும் நான் பார்த்து கொள்கிறேன் என்ற, கட்சியின் பொதுச் செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகனின் சமாதான முயற்சியும் எடுபடவில்லையாம்.

விருதுநகரில் செப்டம்பர் 15 ஆம் தேதி நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழாவை புறக்கணித்து கட்சி தலைமை மீதான தமது அதிருப்தியை உச்சபட்சமாக வெளிப்படுத்தினார் சுப்புலட்சுமி ஜெகதீசன். அவர் பதவி விலகல் கடிதம் கொடுத்து இரண்டு நாட்கள் ஆகியும், அதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்னும் அதிகாரபூர்வ தகவல் எதையும் தெரிவிக்காத நிலையில், உடல்நிலை காரணமாக பதவி விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்திருப்பதாக, அவரது இடத்துக்கு இன்னொரு பெண் நியமிக்கப்படுவார் எனவும் கூறியுள்ளார் திமுக அமைப்புச் செயலாளரான டி.கே.எஸ். இளங்கோவன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.