தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் சார்பில் தமிழகத்திலுள்ள கைவினைக் கலைஞர்களை ஊக்குவித்து அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த ஆண்டுதோறும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு சென்னை குறளகம் கட்டிடத்தில் உள்ள கதரங்காடியின் தரைத் தளத்தில் கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை நடத்தப்பட்டு வருகிறது.
இதனால் கைவினைக் கலைஞர்களுக்கு சந்தை வாய்ப்பு கிடைப்பதுடன், கூடுதல் வருவாய் பெற்று பயனடைந்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்த ஆண்டும் கொலு பொம்மை கண்காட்சியுடன் கலைநயமிக்க, மதிப்புக் கூட்டப்பட்ட மண்பாண்டங்கள் மற்றும் பீங்கான் பொருட்களின் விற்பனை கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த விற்பனை துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் சிறு தானியங்களான தினை, சாமை, கேழ்வரகு, குதிரைவாலி, வரகு மற்றும் மூங்கில் அரிசி போன்றவைகளை விவசாயிகள் மற்றும் வேளாண் உற்பத்தி குழுக்களிடமிருந்து கொள்முதல் செய்து, “காதி கோல்டு” என்ற பெயரில் அரை கிலோ கொள்ளளவு கொண்ட பெட் பாட்டில்களில் நிரப்பி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
அதோடு சிவகங்கை மாவட்டம், கண்டணூர் அலகில் உற்பத்தி செய்யப்பட்ட புதிய ரக “காதி திரவ சலவை சோப்பு” எனும் புதிய சலவை சோப்பு ரகம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இக்கண்காட்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கைவினைக் கலைஞர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆகியோரால் தயாரிக்கப்படும் வண்ணமிகு நிறங்களில் காண்போரைக் கவரும் வண்ணம், தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட தெய்வீக சிலைகள், மண்பொம்மைகள், மரப்பொம்மைகள், காகிதக் கூழ் பொம்மைகள், கற்சிற்பங்கள், மற்றும் மார்பிள் சிற்பங்கள், அரசு மனநலக்காப்பகத்தில் உள்ள உள் நோயாளிகளால் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்கள், பூம்புகார் நிறுவனத்தின் கைவினைப் பொருட்கள், பனை ஓலைப் பொருட்கள் போன்ற பல விதமான பொருட்களுக்காக 27 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், மண்பாண்ட கூட்டுறவு சங்கங்கள் மற்றும் PMEGP பயனாளிகளால் தயாரிக்கப்படும் கலைநயமிக்க டெரகோட்டா வகை பொம்மைகள், மதிப்புக் கூட்டப்பட்ட மண்பாண்டங்கள் மற்றும் பீங்கான் பொருட்களுக்கென 8 அரங்குகளும் சேர்த்து மொத்தம் 35 அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் காட்சிப்படுத்தி விற்பனை செய்யப்படவுள்ளது. இதில் குறிப்பாக நீலகிரி மாவட்டத்தை சார்ந்த கோத்தர் இன பழங்குடியினரால் உற்பத்தி செய்யப்படும் கலைநயமிக்க மண்பாண்டங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியில் இந்த ஆண்டிற்கான புதிய வகை பொம்மைகளான சப்தரிஷிகள், கிருஷ்ணர் வனபோஜனம், வீரராகவ உற்சவ பெருமாள், சொர்ண ஆகாச பைரவர் மற்றும் காவேரி செட் போன்ற புதிய வகை பொம்மைகள் பிரத்யேகமாக இடம் பெற்றுள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய கிராமப்புற கைவினைக் கலைஞர்கள் தங்களது தயாரிப்புகளை எளிதில் சந்தைப்படுத்த இந்த கண்காட்சி பெரிதும் உதவியாக இருக்கிறது.
கடந்த ஆண்டு விற்பனை குறியீடாக ரூ.1.50 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் ரூ.85.94 லட்சம் மதிப்பிலான பொம்மைகள் விற்பனை செய்யப்பட்டது. இதனால் 40 கைவினைக் கலைஞர்கள் நேரடியாகவும், 500க்கு மேற்பட்டவர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றனர். நடப்பு விற்பனை கண்காட்சிக்கு ரூ.1.50 கோடி மதிப்பிலான பொம்மைகள், கைவினைப் பொருட்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கண்காட்சி மூலமாக 60 கைவினைக் கலைஞர்கள் நேரடியாகவும், 700க்கு மேற்பட்டவர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவார்கள். இன்று (21.09.2022) குறளகம் கதரங்காடியில் நடைபெற்ற விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி கொலு பொம்மை, கலை நயமிக்க மண்பாண்டங்கள் மற்றும் பீங்கான் பொருட்களின் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்தார்.