ராமநாதபுரம் அருகே சாத்தான்குளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவி ‘ஹிஜாப்’ அணிந்து வந்ததற்கு பள்ளி தலைமை ஆசிரியை தடை விதித்ததை தொடர்ந்து, மனைவியின் தாய் இது குறித்து தலைமை ஆசிரியையிடம் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ‘விகடன் டிஜிட்டல் தளத்திலும் இந்த வீடியோ வெளியிடப்பட்டது.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட கல்வி அலுவலர் முருகம்மாள் தலைமையில், பள்ளி தலைமை ஆசிரியை, பள்ளி ஆசிரியர்கள், மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஜமாத்தார்களுடன் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் கூட்டி கருத்து கேட்கப்பட்டது.
அதில், இஸ்லாமிய மாணவிகள் ‘ஹிஜாப்’ அணிந்துதான் பள்ளிக்கு வருவார்கள் அதற்கு தடை தெரிவிக்க கூடாது என அப்பகுதி ஜமாத்தார்கள் தரப்பில் கூறினர்.
அவர்கள் கருத்துகளை கேட்டறிந்த மாவட்ட கல்வி அலுவலர் முருகம்மாள், “உங்கள் பிள்ளைகள் ‘ஹிஜாப்’ அணிந்து பள்ளிக்கு வரலாம், அதற்கு யாரும் தடை விதிக்க மாட்டார்கள். அதேபோல தலைமை ஆசிரியையிடம் பேசியதை தெரியாமல் வீடியோவாக எடுத்து அதனை வெளியிட்டதும் தவறு” என மாணவியின் பெற்றோரிடமும், ஜமாத்தார்களிடமும் தெரிவித்தார்.
மேலும் பள்ளி தலைமை ஆசிரியையிடம் இதுபோன்ற பிரச்னை எழுந்தால் முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், கருத்து கேட்பு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை அறிக்கையாக முதன்மை கல்வி அலுவலகத்திற்கு தாக்கல் செய்யுமாறும் அறிவுறுத்தினார்.