ஐதராபாத்: தெலங்கானா, ஆந்திராவில் நடத்தப்பட்ட ரெய்டு விவகாரத்தில் உபா சட்டத்தில் 4 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளதுள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கடந்த சில நாட்களுக்கு முன் தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் சுமார் 38 இடங்களில் சோதனை நடத்தியது. குறிப்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) என்ற அமைப்புக்கு தொடர்புடையவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில், நான்கு குற்றவாளிகளை கைது செய்தது.
குற்றம் சாட்டப்பட்ட சையத் யாஹியா சமீர், ஃபெரோஸ் கான், முகமது உஸ்மான், முகமது இர்பான் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 13 (பிரிவு 120-பி, 121-A, 153-ஏ, 143, 34 ஆகிய பிரிவுகளுடன், உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பின் வட்டாரங்கள் கூறுகையில், ‘ஏற்கனவே கைது செய்யப்பட்ட அப்துல் காதரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் மேற்கண்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தீவிரவாத சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அதற்காக சிறப்பு பயிற்சி வகுப்புகள் எடுத்துள்ளனர். அவர்களிடம் இருந்து கத்திகள், இரும்பு கம்பிகள், அரிவாள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்திய அரசு, நீதித்துறை மற்றும் குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக வகுப்புவாதத்தை தூண்டுவது போன்ற உணர்ச்சிகரமான வீடியோக்களை வெளியிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இதுபோன்ற நாசகார மற்றும் தேசவிரோத நடவடிக்கைகளுக்காக மேற்கண்ட அமைப்பினரிடம் இருந்து நிதி உதவியை பெற்றுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று தெரிவித்தன.