தொலைகாட்சிகளில் வெறுப்பு பேச்சு..! தொகுப்பாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் அட்வைஸ்..!

தொலைகாட்சியில் வரும் நிகழ்ச்சிகளில் வெறுப்பு பேச்சு தடுக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தனது கருத்தை தெரிவித்துள்ளது. பொதுவாகவே பல தொலைகாட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் தினந்தோறும் நடைபெற்று வருகிறது.

அதில் சில நிகழ்ச்சிகளில் பெரும் சர்ச்சையாகும் வகையில் சிலர் தங்கள் கருத்துகளை தெரிவிக்கின்றனர். இது சமூகத்தில் வைரலாக பரவி சமூக நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிப்பதாக அமைகிறது. இது சமூக ஊடகங்களிலும் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. இதனை தடுக்கும் நோக்கில் உச்சநீதி மன்றம் தனது கருத்தை தெரிவித்துள்ளது.

டெல்லி சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் கே.எம். ஜோசப் மற்றும் ஹிரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று கூறும்போது, தொலைக்காட்சி சேனல் விவாதத்தின்போது, தொகுப்பாளரின் பங்கு அதி முக்கியத்துவம் வாய்ந்தது. அவரது பங்கு சிக்கலானதும் கூட. நிகழ்ச்சிக்கு விருந்தினர்களாக வந்துள்ள நபர்கள் வெறுப்பு பேச்சை வெளிப்படுத்தாமல் பார்த்து கொள்ள வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது.

எவரேனும் வெறுப்பு பேச்சை தொடங்குகிறார் என்று தெரிந்ததும், தொகுப்பாளர் அந்த நபரை தொடர அனுமதிக்க கூடாது. அதுவே தொகுப்பாளரின் பணியாகும். ஊடகம் அல்லது சமூக ஊடகம் ஆகியவற்றில் வெளிவர கூடிய இதுபோன்ற பேச்சுகள் ஒழுங்குப்படுத்தப்படாமல் உள்ளன என தெரிவித்து உள்ளனர். வெறுப்பு பேச்சுகளுக்கு இடம் கொடுக்கும் தொலைக்காட்சி சேனல்கள் எந்த வித தடைகளும் இன்றி தப்பி விடுகின்றன என்றும் அமர்வு தெரிவித்து உள்ளது. இதுபோன்ற சம்பவங்களில் அரசு ஏன் அமைதியான பார்வையாளராக இருக்கிறது என்றும் சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த கருத்து பலரால் கவனிக்கப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.