இந்தியாவில் இந்தி மொழி: 18 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

இந்தியாவில் இந்தி மொழிக்கற்கைநெறியினை தொடர்வதற்காக இலங்கையின் பல்வேறு பாகங்களையும் சேர்ந்த 18 மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் புலமைப் பரிசில் வழங்கப்பட்டுள்ளது. இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், அம்மாணவர்களின் இந்திய பயணத்துக்கான செலவீனம், கல்விசார் கட்டணங்கள், ஆக்ராவில் உள்ள கேந்திரிய ஹிந்தி சன்ஸ்தானில் (இந்தி மத்திய நிலையம்) ஒருவருட கற்கை நெறிக்கான விருந்தோம்பல் செலவீனம் ஆகியவையும் வழங்கப்படும்.

2. இக்கற்கைநெறிக்காக தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னர், 2022 செப்டெம்பர் 14ஆம் திகதி அம்மாணவர்களைச் சந்தித்து உரையாடியிருந்த உயர் ஸ்தானிகர், இந்தியா இலங்கை இடையிலான பல்லாயிரம் ஆண்டுகால கலாசார, மொழி, இலக்கிய மற்றும் மத ரீதியான தொடர்புகளை வலுவாக்குவதில் இந்தி மொழியினதும் இலக்கியத்தினதும் வகிபாகம் குறித்து சுட்டிக்காட்டியிருந்தார். அத்துடன் அவர்களது இந்திய விஜயத்துக்கான நல்வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார்,

3. இலங்கையில் பயன்பாட்டிலுள்ள வெளிநாட்டு மொழிகளில் மிகவும் பிரபலமானவற்றில் ஒன்றான இந்தி மொழி இலங்கையின் பல்கலைக் கழகங்கள் மற்றும் பாடசாலைகள் உட்பட 80 முன்னணி நிறுவனங்களில் கற்பிக்கப்பட்டு வருகின்றது.

இந்திய உயர் ஸ்தானிகராலயம்

கொழும்பு

20 செப்டெம்பர் 2022

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.