மதுரை: தமிழ்நாட்டில் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தின் மூலம் டைப்ரைட்டிங் மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகள் கடந்த 1971 முதல் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது. இந்த தேர்வு நடைமுறையில் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் மாற்றம் கொண்டு வந்தது. இதன்படி, இரண்டாவது தாள் முதலாவதாகவும், முதல் தாள் இரண்டாவதாகவும் மாற்றப்பட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தனி நீதிபதி, டைப்ரைட்டிங் ேதர்வை பழைய நடைமுறைப்படி வழக்கம் போலவே நடத்த உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து, திருச்சி துறையூரைச் சேர்ந்த ப்ரவீண் குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்தார்.
அதில், புதிய நடைமுறையால் அதிகப்படியானோர் தேர்ச்சி பெறுவர் என கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர், பழைய முறைப்படியே தேர்வு நடத்த வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்தனர். மேலும் திட்டமிட்டபடி செப். 24 மற்றும் செப். 25ல் டைப்ரைட்டிங் தேர்வு நடத்தக் கூடாது. இந்த நீதிமன்றம் அனுமதித்த பிறகே தேர்வு நடத்த வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.