பொள்ளாச்சி அருகே பரம்பிக்குளம் அணை மதகில் திடீர் உடைப்பு

ஆனைமலை:கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம்- ஆழியார் பாசன திட்டத்தின் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சுமார் 4 லட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகிறது. குறிப்பாக, பரம்பிக்குளம் அணை கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில், தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 72 அடி கொண்ட அணையில் சுமார் 17.25 டிஎம்சி தண்ணீர் சேமிக்கலாம். இந்நிலையில், நேற்று அதிகாலை பரம்பிக்குளம் அணையில் உள்ள மூன்று மதகின் நடுவே உள்ள 24 அடி கொண்ட மெயின் ஷட்டரில் உடைப்பு ஏற்பட்டு ஷட்டர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.

மேலும், அதன் வழியாக விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி நீர் வெளியேறி வீணாக சென்றது. தகவல் அறிந்து வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் பாதுகாப்பு கருதி, மற்ற இரண்டு ஷட்டரையும் திறந்தனர். விநாடிக்கு 16 ஆயிரத்து 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அணையை அமைச்சர்கள் துரைமுருகன் , செந்தில்பாலாஜி ,நீர் வளத்துறை முதன்மை செயலாளர் சந்தீப் சக்சேனா, கோவை கலெக்டர் சமீரன் மற்றும் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர்.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘உடைப்பு ஏற்பட்ட ஷட்டரின் எடை 33 டன். தற்போதைய நிலவரப்படி அணையில் 17.64 டிஎம்சி தண்ணீர் உள்ளது. இதில், சுமார் 5.25 டிஎம்சி தண்ணீர் குறைவானால் மட்டுமே, புதிய ஷட்டர் அமைக்கும் பணி துவங்கும். புதிய ஷட்டர் இன்னும் ஒன்றரை மாதத்திற்குள் அமைக்கப்படும்’ என்றனர்.

மதகை சீர்செய்ய நடவடிக்கை அமைச்சர் துரைமுருகன் பேட்டி
பரம்பிக்குளம் அணையின் மெயின் மதகு ஷட்டர் சேதமடைந்ததை நேற்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், ‘ஷட்டரை ஏற்றி இறக்குகின்ற செல்ப் வெயிட் எதிர்பாராமல் உடைந்ததால், ஷட்டர் பழுதாகியுள்ளது. நீர்வழி போக்கில் எந்த தடையும் இல்லாததால், அணையிலுள்ள தண்ணீர் கட்டுக்கடங்காமல் வெளியேறியுள்ளது. தற்போது விநாடிக்கு 16,500கன அடி வெளியேறுகிறது.

இதை கண்டு என் மனம் வேதனையில் துடித்தது. 6 டிஎம்சி வரை வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. மட்டத்திற்கு வந்த பிறகுதான் மதகு  சீரமைப்பு பணி நடைபெறும். இது குறித்து முதல்வருடன் கலந்து பேசி, போர்க்கால அடிப்படையில் சீர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற மதகுகளும் பழுது பார்க்கப்படும். அணைகள் பரமரிப்பு பணியில், கடந்த 10 ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.