பாஜகவில் உண்மையாக உழைத்தோர் புறக்கணிப்பு: நாராயணசாமி கருத்து

புதுச்சேரி: பாஜகவில் உண்மையாக உழைத்தோர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். கட்சி மாறிகளுக்குதான் பாஜகவில் பதவி தரப்பட்டுள்ளது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: ”புதுவை பாஜக எம்எல்ஏக்கள் 2 மாதத்துக்கு ஒருமுறை கூட்டம் நடத்துகின்றனர். நேற்று முன்தினமும் எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தினர். இதில் தொகுதி வளர்ச்சிப் பணிகள் நடைபெறவில்லை எனவும், பாஜக எம்எல்ஏக்கள் தொகுதிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் முதல்வர் மீது புகார் செய்துள்ளனர். பாஜக எம்எல்ஏ.,க்கள் புறக்கணிக்கப்பட்டால் ரங்கசாமிக்கு அளிக்கும் ஆதரவை ஏன் திரும்ப பெறவில்லை? தெம்பு இருந்தால் என்ஆர்.காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டியதுதானே? பாஜகவினர் சும்மா பூச்சாண்டி காட்டக்கூடாது. இது பாஜகவின் இரட்டை வேடத்தையே அம்பலப்படுத்துகிறது.

பாஜக இந்து முன்னணி அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் அமைச்சர் சாய்சரவணக்குமார் காரைக்காலுக்கு சென்றபோது தகுதியில்லாத, வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள 200 பேருக்கு சிகப்பு ரேஷன்கார்டை வழங்கியுள்ளார். ஆனால் ஆயிரக்கணக்கான ரேஷன்கார்டு மாற்றக்கோரும் விண்ணப்பங்கள் குடிமைப்பொருள் வழங்கல்துறையில் தூங்குகிறது. தகுதியில்லாதவர்களுக்கு வழங்கியதை தட்டிக்கேட்ட முன்னாள் அமைச்சர் கமலகண்ணன் மீது பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். அதிகாரிகளை ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் மிரட்டுகின்றனர். இதற்கு காரணம் ரவுடிகளும், கொலையாளிகளும் பாஜகவில் சேர்ந்திருப்பதுதான். கட்சிமாறிகளுக்குத்தான் பாஜகவில் பதவி வழங்கப்பட்டுள்ளது. உண்மையாக உழைத்தவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

தந்தைபெரியார் திராவிடர் கழகத்தினர் அனுமதி பெற்று நடத்திய போராட்டத்தில் திடீரென பாஜக மற்றும் இந்து முன்னணியினர் நுழைந்து கல்வீச்சு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் பேரவைத்தலைவர் செல்வம், போலீஸாரிடம் எப்படி போராட்டத்துக்கு அனுமதியளித்தீர்கள்? என கேட்டு மிரட்டுகிறார். பேரவைத்தலைவர் நடுநிலை வகிக்க வேண்டும். சூப்பர் முதல்வராக ஆளுநர் செயல்படுவதுபோல் இரண்டாவது சூப்பர் முதல்வராக செயல்படும் செல்வம், அரசியல் செய்ய விரும்பினால் பேரவைத்தலைவர் பதவியிலிருந்து விலகி அரசியலுக்கு வரவேண்டும். அவர் தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். பாஜகவின் கூட்டங்கள், நிகழ்ச்சிகள், கட்சி அலுவலக விழாக்களில் பங்கேற்பது துரதிர்ஷ்டவசமானது. தனது அதிகார எல்லையை மீறி அரசு நிர்வாகத்தில் சபாநாயகர் தலையிடுகிறார்” என்று குறிப்பிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.