ஆவின் பால் பாக்கெட்டில் ‘ஈ’ – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!!

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் அல்லது ஆவின் நிறுவனம் என்பது பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வரும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் மூலம் பால், தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், பால்கோவா, மைசூர்பாக், ஐஸ்கிரீம் முதலான பால் உபயோக பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் உள்ள ஆவின் டெப்போக்களில் இருந்து நாள்தோறும் கவ், கோல்டு, எஸ்.எம்., டீ மேட் உட்பட 5 வகை பால் பாக்கெட்டுகள் 5 லட்சத்திற்கு மேல் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆரப்பாளையம் மண்டலத்திற்குட்பட்ட டெப்போக்களில் பால் பாக்கெட்டுகள் நேற்று விநியோகிக்கப்பட்டன. நாகமலை புதுக்கோட்டை காமராஜர் பல்கலைக்கழகம் அருகே உள்ள டெப்போவில் அந்த பகுதியை சேர்ந்த பெண் எஸ்.எம்.கிரீன் கலர் ஆவின் பால் பாக்கெட்டை வாங்கினார்.

அப்போது பால் பாக்கெட்டிற்குள் ‘ஈ’ மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் டெப்போ ஊழியரிடம் தெரிவித்ததுடன் அந்த பால் பாக்கெட்டை அவரிடமே ஒப்படைத்தார். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது.

இதன் காரணமாக நேற்று குறிப்பிட்ட டெப்போவில் ஆவின் பால் பாக்கெட்டுகளை வாங்க மக்கள் தயக்கம் காட்டினர். இந்நிலையில் பால் பாக்கெட்டிற்குள் ‘ஈ’ கிடந்த சம்பவம் குறித்து அறிந்த ஆவின் அதிகாரிகள் பல்கலைக்கழகம் அருகே உள்ள டெப்போவிற்கு வந்து ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து ஆவின் ஊழியர்கள் கூறுகையில், ‘மதுரை மாவட்டத்தில் ஆவின் உற்பத்தி பிரிவில் எந்தவித தவறும் நடக்காமல் இருக்க தீவிரமாக கண்காணித்து வேலை செய்து வருகிறோம். பேக்கிங் செய்யப்படும்போது இந்த தவறு நிகழ்ந்திருக்க வாய்ப்பு உள்ளது’ என்றனர். இதுபோன்ற தவறு இனி நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆவின் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.