வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில், பின் இருக்கையில் அமர்ந்திருப்போரும், ‘சீட் பெல்ட்’ அணியாததை எச்சரிக்கும் வசதியை ஏற்படுத்தும் வகையில் வரைவு விதிகளை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்போர் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதை பெரும்பாலானோர் கடைப்பிடிப்பதில்லை. இதனால் விபத்துகளில் சிக்கும்போது உயிரிழப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.இதையடுத்து, ‘காரில் பயணிப்போர் சீட் பெல்ட் அணியாத போது, அது குறித்து எச்சரிக்கும் வசதிகளை ஏற்படுத்த புதிய விதிகள் வெளியிடப்படும்’ என, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்தார்.
இதன்படி, இதற்கான வரைவு விதிகளை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. இது குறித்து, அக்., 5ம் தேதி வரை பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.புதிய விதிகளின்படி, கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில், சீட் பெல்ட் அணியாத போது அது குறித்து, ‘வீடியோ’ மற்றும் ‘ஆடியோ’ வாயிலாக எச்சரிக்கும் வசதிகளை ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது, பின் வரிசை இருக்கைகளுக்கும் பொருந்தும்.இதுதவிர அதிக வேகத்தில் செல்லும் போது எச்சரிக்கும் வசதியையும் ஏற்படுத்த வேண்டும் என, வரைவு விதிகளில் கூறப்பட்டுள்ளது.
– நமது சிறப்பு நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement