பெங்களூரு: அரசு ஒப்பந்தங்கள் வழங்குவதில் 40% கமிஷன் கேட்பதாக ஒப்பந்ததாரர்கள் குற்றம்சாட்டிய நிலையில், முதல்வர் பசவராஜ் பொம்மை படத்துடன் `பே சி.எம்’ என்ற பெயரில் கியூஆர் கோடுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் பசவராக் பொம்மை தலைமையில் பாஜ ஆட்சி நடந்து வருகிறது. இங்கு அரசு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளும் அரசு ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவீதம் கமிஷன் வாங்குவதாக கர்நாடக மாநில அரசு ஒப்பந்ததாரர்கள் சங்கம் மற்றும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் ஆளும் பாஜ-காங்கிரஸ் தலைவர்கள் இடையில் வார்த்தை போர் உச்சகட்டத்தை எட்டி உள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் பெங்களூரு மாநகரில் உள்ள முக்கிய சாலைகளின் சுவர்களில் முதல்வர் பசவராஜ் பொம்மை படம் மற்றும் கியூஆர் கோடுடன் `பே சி.எம்’ (பேடிஎம் 40% ஏற்று கொள்ளப்படும்) என்ற வாசகத்துடன் 8447704040 என்ற தாலைபேசி எண்ணுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதை பார்த்த மக்கள் கிண்லடித்து சென்றனர். இது, பாஜவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால், பல இடங்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கிழித்து வருகின்றனர். இந்த போஸ்டர் தொடர்பாக பெங்களூரு மத்திய பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, போஸ்டரில் உள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்டால், காங்கிரஸ் வெளியிட்டுள்ள 40 சதவீதம் கமிஷன் அரசு என்ற இணையதளத்திற்கு செல்கிறது. இதனால், ஆளும் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் தரப்பில் சுவரொட்டிகள் ஒட்டி இருப்பதாக பாஜவினர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.