குருவாயூரப்பன் திருக்கோயில், கேரளா மாநிலம், திருச்சூரில் உள்ள குருவாயூரில் அமைந்துள்ளது.
குரு பகவானும், வாயுபகவானும் சேர்ந்து உருவாக்கிய ஊர் குருவாயூர். குரு பகவான் சிவனின் அவதாரம். குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். இங்கு குருவே ஒரு ஊரை எழுப்பியுள்ளார் என்றால் அங்கு இருக்க கூடியவர்களுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கும் என்பதை சொல்லாமலே புரிந்து கொள்ள வேண்டும்.
வாயு பகவான் தென்றலாகவும் வீசுவார். புயலாகவும் மாறுவார். கண்ணன் தென்றலாக இருப்பான் தன் பக்தர்களுக்கு. புயலாக மாறுவான் கவுரவர்களை போன்ற துஷ்டர்களை தண்டிப்பதற்கு.
குருவாயூரில் மூலவர் உன்னி கிருஷ்ணன் எனப்படுகிறார். இவர் கல்லிலோ வேறு உலோகத்திலோ வடிக்கப்படவில்லை. பாதாள அஞ்சனம் என்னும் மையால் செய்யப்பட்டது இச்சிலை. இந்த சிலையை கிருஷ்ணனே செய்ததாகவும் கூறுவதுண்டு.
தன்னைத் தானே சிலையாக வடித்து குருவாயூர் தலத்தில் வந்து அமர்ந்ததாகக் கூறுவதுண்டு. இந்த சிலையை தனது பக்தரான உத்தவரிடம் கண்ணன் கொடுத்தார். உத்தவர் துவாரகையில் வசித்தவர்.
துவாரகையை கடல் கொள்ளும் என்றும், அந்த சமயத்தில் இந்த சிலை கடலில் மிதக்கும் என்றும், அதை பிரகஸ்பதியான குருபகவானிடம் ஒப்படைத்து அவர் விரும்பும் இடத்தில் பிரதிஷ்டை செய்யச் சொல்ல வேண்டும் என்றும் சொன்னார்.