இலங்கையிலுள்ள அரச பாடசாலைகளில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கல்வி நடவடிக்கைகளுக்கு உதவுமாறும் கேட்ஸ் அறக்கட்டளையிடம் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த கோரிக்கை விடுத்துள்ளார்.
கல்வி உச்சி மாநாட்டிற்க்காக அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள கல்வி அமைச்சர் இ கேட்ஸ் அறக்கட்டளையின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்ட போதே இவ்வாறு அழைப்புவிடுத்தார்.
இதன் போது வளர்ந்து வரும் நாடுகளில் கல்வி துறையை அபிவிருத்தி செய்வதற்காக கேட்ஸ் அறக்கட்டளையினால் நடைமுறைப்படுத்தப்படும் உலகளாவிய அபிவிருத்தி வேலைத் திட்டத்திற்கு அமைச்சர் பிரேமஜயந்த தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையில் தரம் 1 தொடக்கம் பல்கலைக்கழகம் வரையில் இலவச கல்விக் கொள்கையொன்று நடைமுறையில் உள்ளது என்பது பற்றி எடுத்துரைத்து உள்ளதுடன் நாட்டில் தெரிவு செய்யப்பட்ட அரச பாடசாலைகளின் தொழில்நுட்பத் திறனை அதிகரிக்க அதாவது பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வந்த கரும்பலகைகளை ஸ்மார்ட் போர்டுகளாக மாற்றுவதற்காக கேட்ஸ் அறக்கட்டளை (Gates Foundation) யின் ஆதரவை எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு கல்வியில் முதலீடு செய்வது இன்றியமையாதது என்பதை வலியுறுத்தும் அதே வேளையில்இ தற்போது நிலவும் பொருளாதார சூழ்நிலை காரணமாக இந்த தேவையை வழங்குவதற்கான நிதியை பெறுவதில் இலங்கை தற்போது சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் இலங்கையில் பொதுக் கல்வித் துறையை பேணுவதற்கும் மற்றும் அத்தியாவசியமான செலவுகளை பேணுவதற்கும் மட்டுமே அரசாங்கம் தற்போது நிதியைப் பயன்படுத்துவதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கேட்ஸ் அறக்கட்டளை இலங்கையின் கல்வியில் முதலீடு செய்வதில் கைகோர்த்து அதன் அடிப்படை நோக்கங்களை அடைவதற்கு வசதியாக இருந்தால்இ ஸ்மார்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தேசிய மற்றும் சர்வதேச கல்வி முறைகளை மாணவர்கள் பெற முடியும் என்றும் அமைச்சர் இதன் போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.