ஆஸ்திரேலியாவில் கொத்து, கொத்தாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்

கான்பெர்ரா,

ஆஸ்திரேலியா நாட்டின் டாஸ்மேனியா தீவில் உள்ள மேக்வாரி துறைமுகத்துக்கு அருகே உள்ள கடற்கரையில் நேற்று 200-க்கும் அதிகமான திமிங்கலங்கள் கரை ஒதுங்கின.

ஒரே நேரத்தில் கொத்து, கொத்தாக திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவற்றில் பாதிக்கும் அதிகமான திமிங்கலங்கள் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே அவற்றை மீட்டு மீண்டும் கடலுக்குள் விடுவதற்கான முயற்சிகளில் கடற்படையினரும், தன்னார்வலர்களும் ஈடுபட்டுள்ளனர். எனினும் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ள இடம் சிக்கலான பகுதியாக இருப்பதால் மீட்பு குழுக்களால் உடனடியாக அங்கு செல்ல முடியவில்லை என்று கூறப்படுகிறது. அதே சமயம் உள்ளூர் மக்கள் கரை ஒதுங்கிய திமிங்கலங்களை போர்வையால் மூடியும், வாளிகளில் தண்ணீர் ஊற்றியும் அவற்றை உயிருடன் வைத்திருப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது அரிதான விஷயமல்ல. கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே டாஸ்மேனியா தீவு கடற்கரையில் 500க்கும் அதிகமான திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அவற்றில் சுமார் 100 திமிங்கலங்கள் மட்டுமே உயிர் பிழைத்தன.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.