பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா கால் இறுதிக்கு தகுதி

டோக்கியோ,

பான் பசிபிக் ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 6-4, 6-2 என்ற நேர்செட்டில் கிரீசின் தேஸ்பினா பாபாமிக்கேலை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடம் வகிப்பவரும், போட்டித்தரநிலையில் முதலிடம் பெற்றவருமான ஸ்பெயின் வீராங்கனை பாலா படோசா 3-6, 2-6 என்ற நேர்செட்டில் 36-வது இடத்தில் உள்ள கின்வென் செங்கிடம் (சீனா) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 19 வயதான கின்வென் செங், ‘டாப்-10’ இடத்துக்குள் இருக்கும் ஒரு வீராங்கனையை சாய்த்தது இதுவே முதல்முறையாகும்.

தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் வீரங்கனை கரோலின் கார்சியா 6-4, 6-7 (5-7), 6-7 (5-7) என்ற செட் கணக்கில் 28-ம் நிலை வீராங்கனையான சீனாவின் சூவாய் ஜாங்கிடம் போராடி வீழ்ந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் விம்பிள்டன் சாம்பியனான எலினா ரைபகினா (கஜகஸ்தான்) 2-6, 4-6 என்ற நேர்செட்டில் ரஷியாவின் லிட்மினா சாம்சோனோவாவிடம் பணிந்தார். இதே போல் எலிசி மெர்டென்ஸ் (பெல்ஜியம்) 4-6, 1-6 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் கிளைர் லியிடம் தோற்று நடையை கட்டினார்.

கொரியா ஓபனில் அங்கிதா தோல்வி

கொரியா ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி சியோலில் நடந்து வருகிறது. இதன் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 129-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா 1-6, 3-6 என்ற நேர்செட்டில் 70-வது இடத்தில் உள்ள லின் ஹூவிடம் (சீனா) சறுக்கினார்.

மற்றொரு ஆட்டத்தில் சமீபத்தில் நடந்த சென்னை ஓபனில் பட்டம் வென்றவரும், தரவரிசையில் 74-வது இடத்தில் இருப்பவருமான செக்குடியரசு வீராங்கனை லின்டா புருவிர்தோவா 1-6, 4-6 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 396-வது இடத்தில் உள்ள யானினா விக்மேயரிடம் (பெல்ஜியம்) தோல்வியை சந்தித்து ஏமாற்றம் அளித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.