போருக்காக மன்னிப்பு கேட்பதோடு; இழப்பீடும் தர வேண்டும்: ரஷ்யாவுக்கு ஜெலன்ஸ்கி நிபந்தனை

நியூயார்க்: ஐ.நா. பொதுச் சபையில் உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கியின் பதிவு செய்யப்பட்ட உரை அடங்கிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில் அவர் போருக்காக ரஷ்யா மன்னிப்பு கேட்பதோடு, போர் சேதங்களுக்கு இழப்பீடு தர வேண்டும் என்று கோரினார்.

கரோனா பெருந்தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக காணொலியில் மட்டுமே நடந்துவந்த ஐ.நா. பொதுச் சபைக் கூட்டம் இந்த ஆண்டு நேரடியாக நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக இதில் உரையாற்றிய தலைவர்கள் பலரும் ரஷ்ய போருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஐ.நா. பொதுச் சபையில் உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கியின் பதிவு செய்யப்பட்ட உரை அடங்கிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில் ஜெலன்ஸ்கி, “உக்ரைன் இந்த உலக அரங்கில் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறது. எங்கள் பிராந்தியத்தை களவாடும் முயற்சிக்காக ரஷ்யா மன்னிப்பு கேட்க வேண்டும். எங்கள் மக்களை குறிப்பாக எங்கள் பெண்களை கொடுமைப்படுத்தி சிறுமைப்படுத்துவதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். ஐ.நா. சபை ரஷ்யாவைக் கண்டிக்கும் வகையில் பிரத்யேக சிறப்பு கூட்டத்தைக் கட்ட வேண்டும். அது இனி இதுபோன்ற அத்துமீறல்களை செய்ய நினைப்பவர்களுக்கும் ஒரு சரியான பாடமாக இருக்கும். உக்ரைனில் ஏற்படுத்தப்பட்டுள்ள பொருளாதார இழப்புகளுக்கும் ரஷ்யா தான் நிதியளிக்க வேண்டும் .மேலும், ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வர அஞ்சுகிறது. சர்வதேச நெருக்கடிகளுக்கு பணிய மறுக்கிறது. எல்லோரிடமும் பொய்யுரைத்து அப்பட்டமாக அடக்குமுறை செய்கிறது. ரஷ்ய போர் ஒரு தீவிரவாதம் தான். ரஷ்யாவுக்கு இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் எண்ணமே இல்லை” என்றார். ஜெலன்ஸ்கியின் பேச்சுக்கு உலகத் தலைவர்கள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி ஆதரவு தெரிவித்தனர்.

எச்சரித்த புதின்: முன்னதாக, ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினால், ரஷ்யாவையும், அதன் எல்லைகள் மற்றும் மக்களையும் பாதுகாக்க, அணுஆயுத தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம் என்று மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ரஷ்யாவில் இருந்து பிரிந்து சென்ற உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய விரும்பியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ரஷ்யா, கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் பகுதிக்குள் ஊடுருவி, தாக்குதலைத் தொடங்கியது. கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் ரஷ்ய-உக்ரைன் போரால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

போர் காரணமாக உலகின் பல பகுதிகளில் பணவீக்கம் ஏற்பட்டு, பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் பல பகுதிகள் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில், ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதிகளை மீட்க, அந்நாட்டு ராணுவத்துக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை வழங்கி, உதவி வருகின்றன.

இந்த நவீன ஆயுதங்கள் மூலம் ரஷ்யப் படைகள் மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தி, இழந்த பகுதிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. உக்ரைனின் வடகிழக்குப் பகுதியில் ரஷ்ய ராணுவத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை அளித்து போரைத் தூண்டுவது ரஷ்ய அதிபர் புதினுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களை எதிர் கொள்ள, ரஷ்யாவில் உள்ள 20 லட்சம் ராணுவ வீரர்களில், ஒரு பகுதியினரை தீவிரப் போருக்குத் தயாராக இருக்குமாறு அவர் நேற்று உத்தரவிட்டார்.

ரஷ்யாவில் மிகப் பெரிய எண்ணிக்கையிலான ராணுவ வீரர்களைத் திரட்ட உத்தரவிட்டிருப்பது, இரண்டாம் உலகப் போருக்குப் பின் இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. மேலும், உக்ரைனின் சில பகுதி களை ரஷ்யாவுடன் இணைக்கும் திட்டத்துக்கும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

14 நிமிட வீடியோ; பயங்கர எச்சரிக்கை: இந்நிலையில், தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது: மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை அழிக்க விரும்புகின்றன. ரஷ்யாவுக்கு எதிராக அணு ஆயுதப் போரில் ஈடுபடப்போவதாக அவை மிரட்டுகின்றன. அந்த நாடுகள் உக்ரைனில் அமைதியை விரும்பவில்லை.

ரஷ்யாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையில் ஈடுபட அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள், உக்ரைனை ஊக்குவிக்கின்றன. ரஷ்யாவுக்கு எதிரான கொள்கையில், மேற்கத்திய நாடுகள் எல்லைகள் அனைத்தையும் மீறிவிட்டன. எனவே, ரஷ்யாவையும், அதன் எல்லைகள் மற்றும் மக்களையும் பாதுகாக்க அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் தயார். இது பொய் மிரட்டல் அல்ல. அணு ஆயுதங்களுடன் எங்களை மிரட்ட முயற்சிப்பவர்கள், பதிலுக்கு அவர்களை நோக்கி அணு ஆயுதங்கள் திரும்பும் என்பதை உணர வேண்டும். இவ்வாறு ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.