கேரளாவில் ஒரே நாளில் தந்தை, மகள் வழக்கறிஞராக பதிவு

திருவனந்தபுரம்: கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம், கக்காட் பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திரன் (61) இவரது மகள் அனன்யா. இருவரும் ஒரேநாளில் எர்ணாகுளம் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்திருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சுரேந்திரன் ‘இந்து தமிழ் திசை’யிடம் கூறியதாவது:

வழக்கறிஞர் ஆக வேண்டும் என்னும் என் கனவு 61 வயதில் நிறைவேறி உள்ளது. நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது எனது வேதியியல் ஆசிரியர் என்னை நீ சட்டம் படி என உந்தித் தள்ளினார். என் பெரும்பாலான வகுப்புத் தோழர்கள் மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும் உள்ளனர். என் சிறு வயதில் வழக்கறிஞர்கள் சிறப்புத்தன்மை மிக்கவர்கள் என்னும் கருத்தும் என்னுள் ஆழமாக விழுந்தது. நான் ஆரம்பத்தில் கல்லூரி ஆசிரியராக இருந்தேன். தொடர்ந்து கூட்டுறவு வங்கியில் எழுத்தராக வேலை செய்தேன். கடந்த 2018-ம் ஆண்டு ஆர்யங்காவு கூட்டுறவு வங்கியில் பணிஓய்வு பெற்றேன்.

அதே காலக்கட்டத்தில் என் மகள் சட்டக் கல்லூரியில் சேர்ந்தாள். நாமும் ஓய்வு பெற்று விட்டோம். இனி வழக்கறிஞர் கனவை நிறைவேற்றலாம் என என் இரண்டாவது மகள் அனன்யா படிக்கும் கல்லூரியிலேயே சட்டப் படிப்புக்கு சேர்ந்தேன். இப்போது ஒரே நாளில் இருவரும் வழக்கறிஞராக பதிவு செய்ததிலும் மகிழ்ச்சி. இது என் மனைவி ராதா லெட்சுமி, மூத்த மகள் அம்ரிதா உள்பட அனைவரையும் மகிழ்ச்சி யில் ஆழ்த்தியுள்ளது. நானும், அனன்யாவும் வழக்கறிஞராக பதிவு செய்த நேரத்தில் அவர்களும் உடன் இருந்து ஊக்குவித்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.