தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு, 2013=100)1 ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 யூலையின் 66.7 சதவீதத்திலிருந்து 2022 ஓகத்தில் 70.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.
ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்தின் இத்தகைய அதிகரிப்பு உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலும் ஏற்பட்ட மாதாந்த அதிகரிப்பினால் பிரதானமாகத் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2022 யூலையின் 82.5 சதவீதத்திலிருந்து 2022 ஓகத்தில் 84.6 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 யூலையின் 52.4 சதவீதத்திலிருந்து 2022 ஓகத்தில் 57.1 சதவீதத்திற்கு அதிகரித்தது.
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம், 2022 ஓகத்தில் 2.45 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. இதற்கு, முறையே 0.91 சதவீதத்தினையும் 1.53 சதவீதத்தினையும் கொண்ட உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்தன. அதற்கமைய, உணவு வகையினுள் உடன் மீன், முட்டை, பிஸ்கட்டுகள் மற்றும் பழங்கள் என்பவற்றின் விலைகளில் அதிகரிப்புக்கள் அவதானிக்கப்பட்டன. எவ்வாறாயினும், மாதகாலப்பகுதியில் பருப்பு, அரிசி மற்றும் சீனி என்பவற்றின் விலைகள் குறைவடைந்தன. மேலும், உணவல்லா வகையினுள் மாதகாலப்பகுதியில் வீடமைப்பு, நீர், மின்சாரம், எரிவாயு மற்றும் ஏனைய எரிபொருட்கள் (மின்சாரம், பராமரித்தலுக்கான பொருட்கள் மற்றும் மண்ணெண்ணை), தளபாடங்கள், வீட்டுச் சாதனங்கள் மற்றும் வழமையான வீட்டுப் பராமரிப்பு (சலவைச் சவர்க்காரம்) மற்றும் நானாவிதப் பொருட்கள் மற்றும் பணிகள் போன்ற துணை வகைகளின் விலைகளில் அதிகரிப்புக்கள் அவதானிக்கப்பட்டன. போக்குவரத்து (பெற்றோல், டீசல் மற்றும் பேருந்துக் கட்டணம்) துணை வகையில் மாதகாலப்பகுதியில் வீழ்ச்சி பதிவாகியது குறிப்பிடத்தக்கதாகும்.
முழுவடிவம்