சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி டி.ராஜா இன்று (செப்.22) பொறுப்பேற்றுக் கொண்டார்.
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக இருந்த எம்.துரைசாமி நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி டி.ராஜாவை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி டி.ராஜா பொறுப்பு தலைமை நீதிபதியாக இன்று பொறுப்பேற்று கொண்டார்.பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள நீதிபதி டி.ராஜா தலைமை நீதிபதியின் நீதிமன்ற அறையில் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் இணைந்து பொதுநல வழக்குகள் உள்ளிட்ட தலைமை நீதிபதி விசாரிக்கும் வழக்குகளை விசாரிக்க தொடங்கியிருக்கிறார்.
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எம்.துரைசாமி, நேற்றுடன் பணி ஓய்வு பெற்றதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 54 ஆக குறைந்துள்ளது.75 நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்றத்தில் 21 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள நீதிபதி டி.ராஜா அடுத்த ஆண்டு மே மாதம் 24-ம் தேதி பணி ஓய்வு பெறவுள்ளார்.