காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதற்கான வேட்பு மனுத் தாக்கல் நாளை மறுநாள் தொடங்குகிறது.
இந்த தேர்தலில் ராகுல் காந்தியே மீண்டும் போட்டியிட வேண்டும் என தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில காங்கிரஸ் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், ராகுல் காந்தியோ இந்தியா ஒற்றுமை நடைப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டியில் ராஜஸ்தான் மாநில முதல்வரும் மூத்த தலைவருமான அசோக் கெலாட், கேரளாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் ஆகியோர் உள்ள நிலையில் மூன்றாவது நபராக மூத்த தலைவரான திக் விஜய் சிங்கும் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக டெல்லி வரும் திக் விஜய் சிங் இன்று காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேச இருக்கிறார். இதனால் அவர் நிச்சயமாகக் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. திக்விஜய் சிங்கும் தேர்தலில் களமிறங்கினால் போட்டி கடுமையாக இருந்து வெற்றி வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM