கட்சி தலைவர் தேர்தல் அறிவிப்பை இன்று வெளியிடுகிறது காங்கிரஸ் – 22 ஆண்டுகளுக்குப் பின் தேர்தல்

புதுடெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு கடைசியாக கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடந்தது. இதில் சோனியா காந்தி வெற்றி பெற்றார். ஜிதேந்திர பிரசாதா தோல்வியடைந்தார். காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் சோனியா காந்தி மிக நீண்ட காலமாக இருந்து வந்தார். கடந்த 2017 முதல் 2019-ம் ஆண்டு வரை ராகுல் காந்தி தலைவராக இருந்தார்.

தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தொடர் தோல்விகளை சந்தித்ததால், தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். இதையடுத்து இடைக்கால தலைவராக சோனியா இருந்து வருகிறார். இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்தம் தேவை என கோரிக்கை விடுத்து கபில் சிபல், குலாம் நபி ஆசாத் போன்ற மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினர். இதனால் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் என காங்கிரஸ் மேலிடம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி கட்சி தலைவர் தேர்தல் அறிவிப்பை காங்கிரஸ் தேர்தல் குழு இன்று வெளியிடுகிறது.

இதற்கான வேட்பு மனுத்தாக்கல் செப்டம்பர் 24-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் அக்டோபர் 1-ம் தேதி பரிசீலனை செய்யப்படுகின்றன. மனுக்களை வாபஸ் பெற அக்டோபர் 8-ம் தேதி கடைசி நாள். ஒருவருக்கு மேல் இப்பதவிக்கு போட்டியிட்டால் அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெறும். தேவைப்பட்டால் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19-ம் தொடங்கி அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதில் மூத்த தலைவர்கள் சசிதரூர், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் போட்டிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்தால், ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் டெல்லி வரவேண்டியிருக்கும் என அசோக் கெலாட் நேற்று முன்தினம் கூறியுள்ளார்.

10 மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள், கட்சி தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி வரவேண்டும் என ஆதரவு தெரிவித்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று முன்தினம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.