காற்று மாசுபாட்டினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் டெல்லி. அதிக மக்கள்தொகை, போக்குவரத்து, காலநிலை மாற்றம் போன்ற பல காரணங்களால் அப்பகுதியில் காற்றின் தரம் குறைந்து காணப்படுவதோடு, அவ்வப்போது இறப்புகளும் ஏற்படுகின்றன.
டெல்லி அரசு காற்று மாசுபாட்டினை குறைக்கப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், காற்றை மாசுபடுத்தாத வகையில் எலெக்டிரிக் பேருந்துகளை (இ – பஸ்கள்) இயக்கத் திட்டமிட்டுள்ளது.
பெரும்பாலும் எரிபொருள் (எல்.பி.ஜி) மூலம், சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு (சி.என்.ஜி) மூலம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சி.என்.ஜி மூலம் இயக்கப்படும் பேருந்துகள் காற்றை மாசுபடுத்தும் கார்பன் மோனாக்ஸைடு, கார்பன் டை ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடுகளை வெளியிடுகின்றன.
இந்நிலையில் டெல்லியில் காற்றை மாசுபடுத்தாத வகையில், எலெக்ட்ரிக் பேருந்துகள் இந்த ஆண்டு மே மாதம் முதல் மக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளன. நீல நிறம், வெள்ளை நிறத்தில் உள்ள பேருந்துகளில் “ஜீரோ எமிஷன்ஸ்’’ என எழுதப்பட்டுள்ளது.
இது குறித்து, ஜப்பானில் உள்ள கியூஸு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், செப்டம்பர் 1-ம் தேதி ஆய்வு ஒன்றை வெளியிட்டனர். “டெல்லி பொதுப் போக்குவரத்து பேருந்துகளின் மின்மயமாக்களினால் உண்டாகும் சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் பொருளாதார நன்மைகளை அளவிடுதல்’’ என்ற தலைப்பில் இந்த ஆய்வு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன.
அதன்படி, “மின்சார பேருந்துகள் காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதோடு, பல இணை நன்மைகளையும் பெறலாம். மாவட்ட வாரியாக தெருக்களில் காற்றில் வெளியிடப்படும் 2.5 சிறிய துகள்கள் (பி.எம்) தவிர்க்கப்படுவதோடு, ஆண்டிற்கு இந்த எண்ணிக்கை 44 டன்களாக குறையும். இதனால் காற்று மாசுபாட்டினால் ஏற்படும் இறப்புகள் தவிர்க்கப்படுவதோடு, சுவாசநோய் தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறையும்.
தற்போது உபயோகிக்கப்படும் பேருந்துகளில் இருந்து மொத்த மாசு உமிழ்வில் 74.67 சதவிகித காற்று மாசு குறைக்கப்படலாம்’’ எனத் தெரிவித்துள்ளது.
டெல்லி போக்குவரத்துத்துறை அறிவிப்பின்படி, “தற்போது டெல்லியில் 7,310 பொதுப் போக்குவரத்து பேருந்துகள் உள்ளன. அவற்றில் சி.என்.ஜி பேருந்துகள் 7,060 மற்றும் எலெக்ட்ரிக் பேருந்துகள் 250. அடுத்த மூன்று ஆண்டுகளில் 80 சதவிகித பேருந்துகள் மின்மயமாக்கப்படுவதோடு, 2025-ம் ஆண்டுக்குள் மொத்தம் 8000 எலெக்ட்டிரிக் பேருந்துகள் வரை இயக்கத் திட்டமிடப்படும்” என தெரிவித்துள்ளது.