'அவர்களின் மனநிலைதான் முக்கியம்…' பணியாளர்களுக்கு 11 நாள் லீவு கொடுத்த நிறுவனம்!

நாடு முழுவதும் வரும் அக்டோபர் மாதத்தில் துர்கா பூஜை, தீபாவளி  என பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. முன்பு, பண்டிகை காலங்களில் கடை வீதிகள் அனைத்தும் பரபரப்பாக காணப்படும். துணிக்கடைகள், மளிகை கடைகள் உள்பட அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதும். பண்டிகைகளுக்கு ஒரு மாதத்தில் இருந்தே மக்கள் தங்களின் தேவையானவற்றை வாங்குவதற்கு முட்டிமோதி வருவார்கள்.

தற்போது, கடை வீதிகள் மட்டுமின்றி, ஆன்லைனும் பரபரப்பாகவே காணப்படுகிறது. ஆன்லைன் விற்பனை தளங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு தற்போது தள்ளுபடிகளை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றனர். இதனால், மக்களும் ஆன்லைனில் பொருள்களை வாங்குவதற்கு நாள்களை குறித்துக்கொண்டு காத்திருக்கின்றனர் குறிப்பாக, ஆன்லைனில் ஆடைகளை ஆர்டர் செய்பவர்களின் எண்ணிக்கை இதில் மிக அதிகம் என்றே கூற வேண்டும். 

எனவே, ஆடைகளை ஆன்லைனில் ஆர்டர் பெற்றுக்கொண்டு, வீட்டில் நேரடியாகவே டெலிவரி செய்வதற்கென்று பிரத்யேகமாக பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், மீஷா என்ற ஆன்லைன் நிறுவனமும், ஆடைகளை டெலிவரி செய்வதில் முன்னணியில் இருந்து வருகிறது. 

தற்போது, பண்டிகை கால விற்பனைகள் அனல் பறந்துகொண்டிருக்கும் வேளையில், அந்த நிறுவனம் தனது பணியாளர்களின் மன குளிரும் வகையில் அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது, வேலையில் இருந்து முற்றிலுமாக விடுபட்டு, தங்களின் சொந்த வாழ்வுக்கு திரும்பி, நல்ல மனநிலையில் இருப்பதற்கு என்று தொடர்ந்து 11 நாள்களுக்கு விடுமுறையை அளித்துள்ளது. இதேபோன்று, கடந்தாண்டும் விடுமுறை அளிக்கப்பட்டது நினைவுக்கூரத்தக்கது. 

மீஷோ நிறுவனத்தில் நிறுவனரும், தலைமை தொழிலநுட்ப அதிகாரியான சஞ்சீவ் பர்ன்வால் தனது ட்விட்டர் பக்கத்தில், “தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, ஒட்டுமொத்த நிறுவனத்திற்கு 11 நாள்கள் விடுமுறையை அறிவித்துள்ளோம்!. வரவிருக்கும் பண்டிகை காலத்தையும், பணி மற்றும் சொந்த வாழ்வு சமநிலையின் முக்கியத்துவத்தையும் மனதில் வைத்து, மீஷோ பணியாளர்களுக்கு அக்.22ஆம் தேதி முதல் நவம்பர் 1ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது” என பதிவிட்டுள்ளார். மேலும் தனது ட்வீட்டின் முடிவில்,’மனநலம் முக்கியம்’ என குறிப்பிட்டுள்ளார். 

மீஷா நிறுவனம் இதற்கு முன்னதாக, கட்டுப்பாட்டுகளற்ற பணியிடம், ஆரோக்கியத்திற்காக எத்தனை நாள்கள் வேண்டாமானலும் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம், ஆண்-பெண் உள்பட பாலின பேதமுற்று அனைவருக்கும் 30 வாரம் பேறுகால விடுமுறை மற்றும், பாலின மாறுதலுக்கு 30 நாள்கள் விடுமுறை ஆகிய பல்வேறு தொழிலாளர் நலன் கொண்ட அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.