இஸ்லாமாபாத்: பிரதமர் நரேந்திர மோடியை மீண்டும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பெருமையாக பேசியுள்ளார். வெளிநாட்டில் சொத்துகள் குவிக்கும் விஷயத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப்பை, பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒப்பிட்டு இம்ரான் கான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான் கான் அந்நாட்டின் பிரதமராக இருந்தார். இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு நடந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்தார்.
இதையடுத்து புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்று கொண்டார். இவர் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஆவார்.
இம்ரான் கான் விமர்சனம்
இந்நிலையில் தான் தற்போது பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. உணவு, பெட்ரோல், டீசல் உள்பட பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. மேலும் சமீபத்தில் பெய்த பருவமழையால் பாகிஸ்தானின் பெரும்பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இறந்த நிலையில் நாட்டின் பிரச்சனையை இன்னும் அதிகமாக்கி உள்ளது. இதன் தொடர்ச்சியாக இம்ரான் கான் தொடர்ச்சியாக ஆளும் கட்சியை விமர்சனம் செய்து வருகிறார்.
மோடியை பெருமையாக பேசிய வீடியோ
இதற்கிடையே தான் இம்ரான் கான் பிரதமர் நரேந்திர மோடியை பெருமையாக பேசிய வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் சகோதரர் நவாஸ் ஷெரீப்பை, பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒப்பிட்டு இம்ரான் கான் விமர்சனம் செய்துள்ளார். இந்த வீடியோவில் இம்ரான் கான் பேசியதாவது:
பிரதமர் மோடி பற்றி கூறியது என்ன?
‛‛பாகிஸ்தானில் இருந்து வெளியேறி வெளிநாட்டில் உள்ள ஷெபாஸ் ஷெரீப்பின் சகோதரர் நவாஸ் ஷெரீப்பிற்கு வெளிநாடுகளில் ஏராளமான சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகளின் மதிப்பு பல மில்லியன் ஆகும். இந்த சொத்துகளின் அளவை யாராலும் கணக்கிட முடியாது. உலகில் வேறு எந்த அரசியல் தலைவருக்கும் இந்த அளவுக்கு வெளிநாடுகளில் சொத்துக்கள் இல்லை. நமது அண்டை நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கு எவ்வளவு சொத்துக்கள் உள்ளன?” என கேள்வி எழுப்பினர்.மேலும் குவாட் அமைப்பின் ஒருபகுதியாக இந்தியா இருந்தபோதும் இந்தியா அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி மக்கள் வசதிக்காக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி பயன்படுத்தி வருகிறது. இதனை தான் எங்கள் ஆட்சியின்போது பாகிஸ்தானில் செய்தோம்” என கூறினார்.
பாராட்டுவது முதல் முறையல்ல
இம்ரான் கான், பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டுவது என்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு அவரது ஆட்சி கலையும் தருவாயில், பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து தள்ளினார். அப்போது இந்தியா மக்கள் மிகவும் சுயமரியாதை கொண்டவர்கள். எந்த வல்லரசு நாடுகளும் இந்தியா மீது ஆதிக்கம் செலுத்த முடியாது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஒருபோதும் அனுமதிப்பது இல்லை. இந்தியா பாகிஸ்தான் நாடுகள் ஒரே நேரத்தில் சுதந்திரம் பெற்றாலும் கூட பாகிஸ்தான் மிகவும் மோசமாக நடத்தப்பட்டு வருகிறது என கூறியிருந்தார். அதன் தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலையேற்றம் சமயத்திலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் பிரதமர் நரேந்திர மோடியை இம்ரான் கான் பாராட்டி இருந்தார்.
யார் இந்த நவாஸ் ஷெரீப்?
நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமாக இருந்த காலத்தில் பல்வேறு ஊழல், முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பனாமா வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றன. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவர் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நவாஸ் ஷெரீப் உடல்நலம் பாதிக்கப்பட்டார். 2019ல் லாகூர் உயர்நீதிமன்ற அனுமதியுடன் நவாஸ் ஷெரீப், மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் சென்றார். 4 வாரம் மட்டும் நீதிமன்றம் அனுமதி கொடுத்த நிலையில் அவர் அங்கிருந்து இன்னும் நாடு திரும்வில்லை. இந்நிலையில் தான் நவாஸ் ஷெரீப் தம்பி ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராக தேர்வாகி உள்ளார். இதனால் நவாஸ் ஷெரீப் நிம்மதி அடைந்துள்ளதாகவும், விரைவில் நாடு திரும்ப விரும்புவதாகவும் தகவல்கள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.