மத்தியில் ஆட்சிக் கட்டிலில் இருந்து
காங்கிரஸ்
இறங்கி 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. 2019 மக்களவை தேர்தல் தோல்விக்கு பின்னர் ராகுல் காந்தி கட்சி தலைமை பொறுப்பில் இருந்து விலகிவிட்டார். மூத்த தலைவர்கள் பலரும் விலகி மாற்று கட்சிகளில் இணைந்து விட்டனர். பல மாநிலங்களில் பாஜக மற்றும் பிராந்திய கட்சிகளிடம் காங்கிரஸ் தோல்வி முகம் காணத் தொடங்கியுள்ளது. இனி காங்கிரஸ் அவ்வளவு தான் என்று பாஜக எண்ணிக் கொண்டிருக்கையில் இந்திய ஒற்றுமை பயணத்தை கையிலெடுத்து ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் ராகுல் காந்தி.
நடைபயணம் சென்றால் எல்லாம் மாறிவிடுமா? என்றால் ஒற்றை வார்த்தையில் பதில் சொல்ல முடியாது. ஆனால் மாற்றம் நிகழும் என்பது மட்டும் நிச்சயம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ராகுலின் பின்னால் காங்கிரஸும், இந்திய மக்களும் அணி திரள வாய்ப்பாக அமையும் என்று கூறுகின்றனர். தமிழகத்தில் தொடங்கி ஜம்மு காஷ்மீர் வரை 3,500 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் ராகுல் காந்தி.
12 மாநிலங்கள் வழியாக 150 நாட்களில் கடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் மாநிலமான தமிழகத்தில் தொண்டர்கள் படை ஆங்காங்கே கூடினாலும் குடும்பம் குடும்பமாய் யாரும் வரவில்லை. மாணவர்கள் அன்போடு வந்ததாக செய்திகள் இல்லை. சிறுமிகள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் ராகுலின் கைகோர்த்து நடக்கவில்லை. இவை அனைத்தும் கேரளாவில் நடந்து கொண்டிருக்கிறது.
இந்தியா பெருமைப்பட உங்களோடு நடக்கிறோம். நாமெல்லாம் ஒரே குடும்பம். அதற்காக நடக்கிறோம். இந்தியாவின் தலையெழுத்தை மாற்றி எழுதுங்கள். எங்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்ற ஏதாவது செய்வீர்கள் என்று நம்பிக்கையோடு நடக்க வந்திருப்பதாக கூறியுள்ளனர். இதை காங்கிரஸ் தலைவர்கள் பலரும் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு, எல்லாவற்றுக்கும் ராகுலின் கரீஷ்மா தான் காரணம்.
அவரிடம் அப்படியோரு ஈர்ப்பு நாட்டு மக்களிடம் இருக்கிறது. இந்த விஷயம் நாட்டின் எதிர்காலத்தையே மாற்றி அமைக்கப் போகும் சக்தியாக உருமாறப் போகிறது என்றெல்லாம் குறிப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய ஒற்றுமை பயணத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள Bharat Jodo என்ற அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சுவாரஸியமூட்டும் பல்வேறு வீடியோக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.
குறிப்பாக Sharja Shake கேட்டு ராகுலுடன் கலகலப்பாக உரையாடிய பள்ளி மாணவிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர் சி.ஆர்.நீலகண்டன் பல்வேறு விஷயங்களை ஆலோசித்துக் கொண்டே நடைபயணம் மேற்கொண்டது, ஆலப்புழாவை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் நம்பிக்கையோடு அரவணைத்து சென்றது, எர்ணாகுளத்தில் ஐடி ஊழியர்களுடன் நடந்த கலந்துரையாடல் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
இதற்கிடையில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கேரளாவின் பாரம்பரிய உணவு விருந்து வழங்கப்பட்டது மிகுந்த கவனத்தை ஈர்த்தது. கேரளாவில் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநில மக்களும் ராகுல் காந்தியின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாக காங்கிரஸ் தொண்டர்கள் பெருமிதத்துடன் கூறினர்.