இந்து சிலையை தொட்ட தலித் சிறுவனுக்கு 60 ஆயிரம் அபராதம் – தாய் எடுத்த சபதம்

கர்நாடகாவின் கோலார் மாவட்டம் மாலூர் தாலுகாவில் உள்ளது உல்லேரஹள்ளி கிராமம். இந்த கிராமத்தில் 100 குடும்பங்கள் வரை வசித்து வருகின்றனர். அதில், 80 சதவீதம் பேர் ஒக்கலிகா என்ற சமூகத்தை சேர்ந்தவர்கள். கர்நாடகாவில் உள்ள உயர் சமூக பட்டியலில் ஒரு வகை சாதிதான் இந்த ஒக்கலிகா. இதே கிராமத்தின் எல்லையில் பத்து பட்டியலின சமுகத்தை சார்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி கிராம மக்கள் பூதையம்மா திருவிழாவை நடத்தியுள்ளனர். ஆதிக்க சாதியினர் மட்டுமே கோயில் திருவிழாவில் பங்கேற்க வேண்டும் என்பது அந்த கிராமத்தில் காலம்காலமாக பின்பற்றும் கொடிய வழக்கம் என்கின்றனர்.

இந்நிலையில், திருவிழாவின் ஒரு பகுதியாக, கிராம தெய்வமான சிடிரண்ணாவின் ஊர்வலத்தை கிராம மக்கள் எடுத்துச் சென்றனர். அப்போது அங்கு பட்டியலினத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் சாமியை வழிபட ஊர்வலத்தின் பாதையில் பெற்றோருடன் காத்துக்கொண்டிருந்தான். ஊர்வலம் அருகே வந்தபோது சாமி சிலையுடன் இணைக்கப்பட்ட கம்பத்தில் அச்சிறுவன் கைகளை வைத்து வணங்கியுள்ளான்.

அதை கிராமவாசிகளில் ஒருவரான வெங்கடேசப்பா என்பவர் பார்த்துவிட்டார். உடனே, அதை கிராம பெரியவர்களிடம் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் சிறுவனையும் அவனது குடும்பத்தினரையும் ஊர் பெரியவர்களிடம் ஆஜராகும்படி உத்தரவு போட்டுள்ளனர். பஞ்சாயத்தில் ஆஜரான சிறுவனுக்கு 60,000 ரூபாய் அபராதம் விதித்ததோடு, அக்டோபர் 1-க்குள் தொகையை கட்டவில்லை என்றால் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள் எனவும் மிரட்டியுள்ளனர். இதனால் சிறுவனின் குடும்பம் அதிர்ச்சியில் ஆழ்ந்தது.

சிறுவனின் தாய் ஷோபம்மா பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். தினமும் காலை 5.30 மணிக்கு ரயில் மூலம் பெங்களூருவுக்கு சென்று இரவு 8 மணி அளவில் வீடு திரும்புவார். 13 ஆயிரம் சம்பளத்தை வைத்துதான் குடும்பத்தை நடத்தி வருகிறார். கணவர் உடல்நிலை சரியில்லாததால் இவர் மட்டும்தான் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இந்த சூழலில் கிராம பஞ்சாயத்தில் 60 ஆயிரம் அபராதம் விதித்திருப்பது அவரை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.

இதுகுறித்து ஷோபம்மா கூறுகையில், “கடவுளுக்கு நம் தொடுதல் பிடிக்கவில்லை என்றால் அல்லது மக்கள் நம்மை ஒதுக்கி வைக்க விரும்பினால், நாம் பிரார்த்தனை செய்வதால் என்ன பயன்? மற்றவர்களைப் போலவே நானும் கடவுளுக்காக பணத்தைச் செலவழித்திருக்கிறேன், கடவுளுக்கு நன்கொடை அளித்திருக்கிறேன். இனிமேல், நான் அப்படி எதுவும் செய்ய போவதில்லை. இனி எனது வீட்டில் டாக்டர் அம்பேத்கரை மட்டுமே வழிபடுவேன் என ஷோபம்மா கூறியதாக இந்தியன் எக்ஸ்ப்பிரசில் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இச்சம்பவம் குறித்து உள்ளூர் சமூக ஆர்வலர் மூலம் காவல்துறைக்கும், ஊடகங்களுக்கும் தகவல் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பட்டியலின சிறுவனுக்கு அபராதம் விதித்த ஊர் காரர்கள் மீது வன்கொடுமை வழக்கு பதிவாகி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.