ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகாவில் உள்ள வடக்கு புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வி.எஸ்.சின்னுசாமி -அங்காத்தாள் தம்பதிக்கு மகளாக பிறந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், கொடுமுடி அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். அரசியலில் ஆர்வம் கொண்ட இவர் ஆரம்பத்தில் அதிமுக-வில் ஈடுபாடு கொண்டிருந்தார். 1977 சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றியை கைவசமாக்கியதுடன், ஜவுளி, கதர்த் துறை அமைச்சராகவும் ஆனார் சுப்புலட்சுமி ஜெகதீசன்.
அப்போதைய அதிமுக அமைச்சரவையின் நிதி அமைச்சராக இருந்த நாஞ்சில் மனோகரனின், ஆதரவாளரான சுப்புலட்சுமி ஜெகதீசன் 1980இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியுற்ற பின் நாஞ்சில் மனோகரனுடன் அதிமுகவிலிருந்து வெளியேறி இருவரும் திமுக-வில் இணைந்தனர்.
1989-இல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஈரோடு தொகுதியில் வெற்றி பெற்று திமுக அமைச்சரவையில் சமூகநலத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். 1996 முதல் 2001 வரை மொடக்குறிச்சி எம்.எல்.ஏ-வாகவும், 2004-இல் திருச்செங்கோடு எம்.பி. தொகுதியில் வெற்றி பெற்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையில் மத்திய இணை அமைச்சராகவும் பதவி வகித்தார். .
1984, 2011, 2021 ஆகிய சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்ட சுப்புலட்சுமி ஜெகதீசன் தோல்வியைத் தழுவினார். இப்படி ஏற்ற இறக்கங்களுடன் இருந்த சுப்புலட்சுமியின் அரசியல் வாழ்வில் 2021ஆம் ஆண்டு மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு அடைந்த தோல்வியே அவரின் அரசியல் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது என்று கூறலாம்.
கிச்சன் கேபினெட் அரசியலில் ஈடுபடுவதன் மூலமாகவே சுப்புலட்சுமி ஜெகதீசன் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெறுகிறார் என்ற குற்றச்சாட்டு திமுகவினர் மத்தியிலேயே உண்டு. கட்சிக்காக கடுமையாக உழைத்து, செலவு செய்து, உழைக்கும் பல திமுக முக்கியப் புள்ளிகளை ஓரங்கட்டி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்துடன் தனக்கு உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி, குறிப்பாக கருணாநிதியின் மகள் செல்வியுடன் தனக்கு உள்ள நட்பின் மூலமாக தான் விரும்பும் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு பெறுவது, கட்சியில் முக்கிய பொறுப்புகளை பெறுவதாக திமுகவினர் மத்தியிலேயே இவர் மீது அதிருப்தி உண்டு.
திமுக தலைமை இவரை வேட்பாளராக அறிவிக்கும் போதெல்லாம் சொந்தக்கட்சியினர் அதிருப்தி அடைவதும், இவருக்கு எதிராக உள்ளடி வேலைகளில் ஈடுபடுவதும் வழக்கமாகி விட்டது.
தற்போது 75 வயதாகும் சுப்புலட்சுமி ஜெகதீசன் கடந்த 2021இல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் டாக்டர் சி.கே.சரஸ்வதி போட்டியிட்டார். பாஜக வேட்பாளரான சரஸ்வதியால் வெற்றி பெற முடியாது என்ற ஓவர் கான்ஃபிடன்ட்ஸ் காரணமாக தேர்தல் பணிகளில் சுப்புலட்சுமி ஜெகதீசனும், திமுகவினரும் சுணக்கம் காட்டினர். முயல், ஆமை கதையை நினைவூட்டும் வகையிலான இந்தப் போட்டியில் சரியாக திட்டமிட்டு தேர்தல் பணியாற்றிய பாஜக வேட்பாளர் சரஸ்வதி இறுதியில் வெறும் 280 வாக்குகள் வித்தியாசத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இந்தத் தேர்தல் தோல்விக்குப்பின் திமுகவில் சுப்புலட்சுமி ஜெகதீசனின் செல்வாக்கு கட்சிக்குள் பெருமளவில் சரியத் தொடங்கி விட்டது. கட்சித் தலைமை மீது சுப்புலட்சுமிக்கு ஏற்பட்ட அதிருப்தியே அவரது கணவர் ஜெகதீசன் எழுதிய கவிதை மூலமாக வெளிப்பட்டது.
ஜெகதீசன் வெளியிட்ட கவிதை கடந்த 10 நாள்களாகத்தான் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால், சுப்புலட்சுமி ஜெகதீசனின் அரசியல் விலகல் கடிதம் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதியே கட்சியின் தலைமைக்கு அளித்து விட்டார்.
அந்தக் கடிதத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன், கட்சியின் தலைமையையும், திமுக ஆட்சியின் அவலத்தையும் சுட்டிக் காட்டியிருந்ததாக அவருக்கு நெருக்கமான நண்பர்கள் கூறுகின்றனர்.
சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு நெருக்கமான கட்சியினர் கூறியதாவது, “அமைச்சர் ஒருவருக்கும், சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கும் இடையே பனிப்போர் இருப்பது உண்மைதான். போன 2021 தேர்தலில் தனக்கு எதிராக பாஜக வேட்பாளரை நிறுத்திய போது தனக்கு உறுதியான வெற்றி கிடைக்கும் என்றுதான் சுப்புலட்சுமி ஜெகதீசன் எண்ணினார்.
ஆனால், மொடக்குறிச்சி, கொடுமுடி ஒன்றியங்களில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களே சுப்புலட்சுமி அக்காவுக்கு எதிரா தேர்தல் பணியாற்றுனாங்க. அவர்களைப் பற்றி கட்சித் தலைமைக்கு புகார் கொடுத்தாங்க. அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், அவர்களது பதவியை பறித்து காத்திருப்போர் பட்டியலில் கட்சித் தலைமை வைத்தது. ஆனால், தேர்தல் முடிந்த பின் அந்த அமைச்சர், காத்திருப்போர் பட்டியலில் இருந்த பொறுப்பாளர்களுக்கு மீண்டும் பதவியை வாங்கி கொடுத்துட்டாரு.
இதுவே முதலில் அதிருப்தியை ஏற்படுத்தி விட்டது. தான் புகார் கொடுத்த நபர்களுக்கு மீண்டும் கட்சிப் பதவி வழங்கினால் எனக்கு கட்சிக்குள் என்ன மரியாதை கிடைக்கும் என்று தலைமையிடம் கேட்டார். அதற்கு கட்சித் தலைமை சரியாக ரெஸ்பான்ஸ் பண்ணல. அதுமட்டுமில்ல, கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் போடும் விவகாரத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனிடம் விவசாய அமைப்பின் பிரதிநிதிகளை அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். கான்கிரீட் தளம் போடும் விவகாரத்தில் திமுகவைச் சேர்ந்த முக்கிய நபர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, அவர்களை அந்த அமைச்சர் ஆதரித்தார் என்று மேலிடத்துக்கு புகார் தெரிவித்தார் சுப்புலட்சுமி.
அதிமுக காலத்தில் கிராவல் மண் எடுக்கும் உரிமத்தை பெற்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த பிரமுகருக்கே மீண்டும் திமுக காலத்திலும் உரிமம் வழங்கியதற்கும் சுப்புலட்சுமி எதிர்ப்பு தெரிவித்தார். இப்படியே போனால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என்று தலைமையை பல முறை எச்சரித்தார். ஆனால் அவரது சொல்லுக்கு கட்சி மேலிடம் செவி சாய்க்கவில்லை. தற்போது, கட்சியில் இருந்து விலகிய பின் சுதந்திரமாக ஃபீல் செய்வதாக அக்கா சொல்றாங்க. பாஜகவுக்கு போக மாட்டாங்க… அரசியலில் இருந்து விலகினாலும் பாஜக உள்ளிட்ட வேற எந்தக் கட்சியிலும் சேரப் போவதில்லை என்பதில் அக்கா உறுதியாக இருக்காங்க. முன்பு எல்லாம் கட்சிக்கு கொள்கை, கோட்பாடுகள் இருந்திச்சு. எப்போ கொடி கட்டும் பணியை கம்பெனிக்காரங்க கிட்ட கொடுத்தாங்களோ அப்பவே, கட்சியின் நிறமும் மாறி விட்டது” என்று வேதனையுடன் கூறினர் கட்சியினர்.
சுப்புலட்சுமி ஜெகதீசனின் எதிர்காலத் திட்டம் என்ன என்பதை அறிந்து கொள்வதற்காக அவரை பல முறை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதிலும் அவர் எடுக்கவில்லை. மெசேஜ் அனுப்பியதற்கும் பதிலில்லை. சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியல் களத்தில் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்த போதிலும் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு பெரும் சவாலாக அமைந்தது 1996 இல் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தல்தான்.
அந்தத் தேர்தலில் தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் 33 கோரிக்கைகளை வலியுறுத்தி 28 பெண் வேட்பாளர்கள் உள்பட 1033 பேர் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள். இந்திய வரலாற்றிலேயே ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிக அளவிலான நபர்கள் போட்டியிட்டது அந்தத் தேர்தலில்தான். வாக்குச்சீட்டு மட்டும் 50 பக்கங்கள் அச்சிடப்பட்டிருந்தன. அந்தத் தேர்தலில் திமுக சார்பில் களம் கண்ட சுப்புலட்சுமி ஜெகதீசன் 64,436 வாக்குகள் பெற்று தனக்கு அடுத்த இடத்தை பிடித்த அதிமுகவின் ஆர்.என்.கிட்டுசாமியை விட 39,540 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார். இது அவரது அரசியல் பயணத்தில் பெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது.