சிதம்பரம்: 15 வயது மகளுக்கு திருமணம் செய்து வைத்த சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர், திருமணம் செய்த தீட்சிதர் உள்ளிட்டோரைபோலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சிதம்பரம் அதாவது தில்லை தீட்சிதர்கள் தனித்துவமானவர்கள் என கூறப்படுகிறது. திருக்கயிலாயத்தில் இருந்துச சிவபெருமானோடு சிதம்பரத்துக்கு வந்தவர்கள்தான் இந்த தீட்சிதர்கள் என்கிறது புராண வரலாறு.
சிதம்பரம் தீட்சிதர்களைப் பொறுத்தவரை மொத்தமே 4 கோத்திரங்கள் எனப்படும் உட்பிரிவினர்தான். ஸ்ரீவத்ஸ கோத்திரம், கௌண்டின்ய கோத்திரம், ரிஷிக்யான்யர் கோத்திரம், விஸ்வாமித்திர கோத்திரம் ஆகிய உட்பிரிவுகள்தான் தீட்சிதர்களுக்குள் உண்டு. மற்றவர்களைப் போல அத்தை மாமன் முறை என்றெல்லாம் திருமணத்தில் கடைபிடிப்பதும் இல்லை.
சர்ச்சை திருமண முறை
தீட்சிதர்கள் தங்களது குடும்பங்களுக்குள் மட்டும் திருமணம் செய்து கொள்வது வழக்கம். குழந்தை திருமணம் என்பதெல்லாம் தடை செய்யப்பட்டதாகவும் பொருட்படுத்தவும் அவர்கள் இல்லை. சிதம்பரம் தீட்சிதர்களின் வாழ்வியல் முறை குறித்த சர்ச்சைகள் விவாதப் பொருளாகவே இருக்கின்றன. சிதம்பரம் நடராஜர் கோவிலை முன்வைத்து தீட்சிதர்கள் மீது ஏராளமான புகார்களும் உள்ளன. இந்த பின்னணியில்தான் சிதம்பரத்தில் கடந்த ஆண்டு நடந்த குழந்தைத் திருமணம் பெரும் சர்ச்சையானது.
குழந்தை திருமணம்
சிதம்பரம் நடராஜர் கோவிலைச் சேர்ந்த சோமசேகர தீட்சிதர் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு 9-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 14 வயது மகளுக்கு திருமணம் செய்து வைத்தார். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. தற்போது இந்த குழந்தை திருமணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீட்சிதர்கள் கைது
இந்த விசாரணையில் சிறுமியின் தந்தையான சோமசேகர தீட்சிதர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் சிறுமியை திருமணம் செய்த நபர் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். இது தொடர்பாக தப்பி ஓடிய நபரை போலீசார் வலைவீசி தேடிவந்தனர். இந்த நிலையில் தப்பி ஓடிய திருமணம் செய்த பசுபதி தீட்சிதரும் பிடிபட்டுள்ளார்.
3-வது நபரும் கைது
மேலும் தமக்கு பெற்றோர் குழந்தை திருமணம் செய்து வைத்தனர் என அந்த சிறுமியும் போலீசாரிடம் தெரிவித்துவிட்டார். இந்த வழக்கில் திருமணம் செய்த பசுபதி தீட்சிதரின் தந்தை கணபதியையும் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.