நடிகர் மாதவன் இயக்குநர் அவதாரம் எடுத்த படம் ராக்கெட்ரி. நாட்டின் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றுவிட்டதாக போலி புகார் அளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நம்பி நாராயணனின் வாழ்க்கையை தழுவி படம் எடுக்கப்பட்டிருந்தது. நம்பி நாரயணனாக மாதவன், அவரது மனைவியாக சிம்ரன் நடித்திருந்த இப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். சாம் சி.எஸ். இசையமைத்தார்.அதேபோல் ஹிந்தி பதிப்பில் ஷாருக்கான் கெஸ்ட் ரோலில் நடித்தார். இருவரும் சம்பளமே வாங்காமல் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரும் எதிர்பார்ப்போடு பான் இந்தியா படமாக வெளியான ராக்கெட்ரி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதுமட்டுமின்றி, ராக்கெட் பற்றி மாதவன் எந்த வித சமரசமும் செய்யாமல் எடுத்திருக்கிறார். ஆனால் ராக்கெட் தொழில்நுட்பத்தையும், அறிவியலையும் இன்னமும் ரசிகர்களுக்கு புரியும்படி எடுத்திருக்கலாம் என்றும்; நம்பி நாராயணன் நடத்திய சட்டப்போராட்டம் பற்றி படத்தில் காட்சிகள் இல்லாதது படத்திற்கு மைனஸ் என்றும் விமர்சகர்கள் கூறினர். மேலும் படத்தை இயக்கியதில் மாதவனிடம் சில மைனஸ்கள் தென்பட்டதாகவும் பேச்சு எழுந்தது.
அதுமட்டுமின்றி படத்தில் கூறப்பட்டிருக்கும் தகவல்களில் 90 சதவீதம் பொய்யானவை எனவும் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகள் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், விழா ஒன்றில் கலந்துகொண்ட மாதவன் தனது எதிர்கால திட்டங்கள் குறித்து பேசியுள்ளார். மாதவன் பேசுகையில், “இப்போது நடிப்பு வாழ்க்கையில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். மேலும், எந்த படத்தையும் இயக்குவதில் எனக்கு இப்போது ஆர்வம் இல்லை.
எதிர்காலத்தில் இயக்குநர் பொறுப்பை மீண்டும் எடுப்பேன் என நினைக்கவில்லை. நான் ஒரு தற்செயலான இயக்குநர். எனவே நான் இன்னொரு படத்தை இயக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று சொல்ல முடியாது” என்றார்.