நள்ளிரவில் பெண்கள் நகை அணிந்து தனியாக செல்கின்றனரோ அன்றுதான் உண்மையான சுதந்திரம் இந்தியாவுக்கு கிடைத்ததாக உணரப்படும் என மகாத்மா காந்தி சொன்னார். அந்த சுதந்திரம் இன்று வரை பெண்களுக்கு எட்டாக்கணியாகவே இருக்கிறது. அவர்கள் மீதான வன்கொடுமை தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. காந்தி சொன்னது போல, சிறுமி ஒருவர் நடு இரவில் நடந்து வந்துள்ளார். ஆனால், நகைகள் அணிந்து அல்ல; ஆடைகளின்றி நிர்வாணமாக. கேட்கவே பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவம் அரங்கேறியது உத்தரப்பிரதேச மாநிலத்தில்.
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் அருகே 15 வயதான சிறுமி ஒருவர் ஐந்து பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். சிறுமியை சீரழித்த காமுகர்கள், சிறுமியின் ஆடைகளையும், உடமைகளையும் எடுத்துக் கொண்டு சென்று விட, சுமார் 2 கி.மீ தூரம் அச்சிறுமி தன்னந்தனியாக நடந்து வந்துள்ளார். வழியில் அச்சிறுமியை கண்டவர்கள் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை; மாறாக அச்சிறுமியை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி சிலாகித்துள்ளது இந்த கொடூர சமூகம்.
சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் கூறுகையில், “நள்ளிரவில் வீட்டுக்கு வந்த சிறுமி ரத்தம் சொட்ட சொட்ட மிகவும் மோசமான நிலையில் வந்தார். உடனடியாக காவல்நிலையத்தில் புகாரளித்தும் பயன் இல்லை. மாவட்ட காவல்துறை தலைவரை அணுகியதையடுத்தே, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். குற்றவாளிகளின் குடும்பத்தினர் எங்களைக் கொன்று விடுவதாக மிரட்டல் விடுக்கின்றனர்.” என்றார்.
இதுகுறித்து மொராதாபாத் போலீசார் கூறுகையில், “அருகில் உள்ள கிராமத்தில் நடந்த திருவிழாவுக்குச் சென்ற சிறுமியை ஐந்து பேர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமியின் கூச்சல் சத்தம் கேட்டு கிராமத்தினர் ஓடி வந்துள்ளனர். இதனால், ஆடைகள் உள்ளிட்ட உடைமைகளை குற்றவாளிகள் எடுத்துக் கொண்டு ஓடிவிட்டனர்.” என்று தெரிவித்துள்ளனர்.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்தீப் குமார் மீனா கூறும்போது, “சட்டப்பிரிவு 376D (கூட்டு பலாத்காரம்) மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை செப்டம்பர் 15 ஆம் தேதி கைது செய்துள்ளோம். விசாரணை நடைபெற்று வருகிறது.” என்றார்.
வழக்குப்பதிவு, விசாரணை, தண்டனைகள் ஒருபுறம் இருந்தாலும், பாதிக்கப்பட்ட அதுவும் 15 வயதேயான சிறுமி ஒருவர் சாலையில் ஆடையில்லாமல் நடந்து சென்று கொண்டிருப்பதை பார்த்த அப்பகுதிய சேர்ந்த பொதுமக்களில் ஒருவர் கூட, அந்த சிறுமியின் மீது துணியை போர்த்தி பத்திரமாக அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்ல முன்வராமல், சிறுமியை வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிவேற்றும் அளவுக்கு மனிதநேயம் மாண்டு விட்டது என்பதுதான் கவலையளிக்கும் விஷயமாக உள்ளது.