வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: நெப்டியூன் கோளின் துல்லிய படத்தை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்துள்ளது. இந்த படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
அமெரிக்க விண்வெளி மையமான நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்களுடன் இணைந்து 20 ஆண்டு உழைப்புக்குப் பின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை உருவாக்கின. இந்த ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்டு, பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ., தொலைவில் நிலைநிறுத்தப்பட்டது. இதில் தங்கத்துடன் பெர்லியம் பூசப்பட்ட குவி ஆடி கண்ணாடிகள் உள்ளன. இதனால் தொலைதூரத்தில் உள்ள நட்சத்திரங்கள், சிறுகோள்களை படம் எடுக்க முடியும். இந்த தொலைநோக்கி சமீபத்தில் வியாழன் கோளை படம் பிடித்தது.
இந்த நிலையில், தற்போது நெப்டியூன் கோளை துல்லியமாக படம் பிடித்துள்ளது. இந்த புகைப்படங்களை நாசா நேற்று (செப்.,21) வெளியிட்டுள்ளது. சூரிய குடும்பத்தின் கடைசி கோளான நெப்டியூன், பூமியில் இருந்து 4.3 பில்லியன் கி.மீ தொலைவில் இருக்கிறது. பனிக்கட்டியால் நிரம்பி ராட்சத கோளாக சூரியனை வலம்வரும் இந்த கோளிற்கு சனி கோளைப் போன்று வளையங்கள் உண்டு. ஆனால் அந்த வளையங்களின் தெளிவான புகைப்படங்கள் இதுவரை கிடைக்காமலேயே இருந்து வந்தது. முதன்முதலாக நெப்டியூன் வளையங்களுடன் இருக்கும் ஒரு தெளிவற்ற படத்தை நாசாவின் வாயேஜர் – 2 விண்கலம் 1989ம் ஆண்டு எடுத்தது.
அதன்பின்னர் தற்போது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் துல்லியமான படம் வெளியாகியுள்ளது. நெப்டியூனின் அடர்த்தியற்ற வளையங்களை தொலைநோக்கியின் அகச்சிவப்பு கேமரா படம் பிடித்துள்ளது.
இதன் காரணமாக தனது வழக்கமான நீல நிறத்திற்கு பதிலாக ஊதா நிறத்தில் காட்சியளிக்கிறது நெப்டியூன். நெப்டியூனுக்கு 14 துணைக்கோள்கள் இருக்கும் நிலையில் அவற்றில் கலாட்டியா, நயாட், தலசா, டெஸ்பினா, புரோட்டியஸ், லாரிசா மற்றும் ட்ரைடன் ஆகிய ஏழு துணைக்கோள்களையும் படம்படித்து அசத்தியுள்ளது ஜேம்ஸ் வெப். நெப்டியூனின் வளிமண்டலம் தொடர்பான புதிய கோணத்தை காட்டுவதாக ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் அறிவியல் மற்றும் ஆய்வுக்கான மூத்த ஆலோசகர் மார்க் மெக்காக்ரியன் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement