ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் தடாலடி நடவடிக்கைகளால் அம்மாநில காங்கிரஸ் கட்சி உடைந்து சிதறித்தான் போகும் என்கிற நிலைமை உள்ளது.
ராஜஸ்தான் முதவர் அசோக் கெலாட், காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ளார். அசோக் கெலாட், தலைவராக வேண்டும் என்பது சோனியா காந்தி குடும்பத்தின் விருப்பம்.
ஆனால் அசோக் கெலாட் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பது போல, அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும் இருப்பேன்; மாநில முதல்வராகவும் இருப்பேன் என அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார். இது காங்கிரஸ் கட்சியில் பெரும் புகைச்சலைக் கிளப்பி இருக்கிறது.
சச்சின் பைலட்
ராஜஸ்தான் மாநிலத்தைப் பொறுத்தவரை இளம் ரத்தம் சச்சின் பைலட், ரொம்பவே பொறுமை காத்துவிட்டார். காங்கிரஸுக்கு குட்பை சொல்லிவிட்டு எப்போதோ பாஜகவில் ஐக்கியமாகி இருக்க வேண்டியவர் பைலட். ஆனாலும் காலம் கணிந்து வரும் என்று கெலாட்டின் அத்தனை குடைச்சல்களையும் பொறுமையுடன் எதிர்கொண்டு நிற்கிறார் பைலட்.
கொந்தளிப்பில் பைல்ட் ஆதரவாளர்கள்
இப்போது இயல்பாகவே அசோக் கெலாட், அகில இந்திய காங்கிரஸ் தலைவரானால் ராஜஸ்தானில் முதல்வர் பதவியும் சச்சின் பைலட் வசமாகும்; ராஜஸ்தான் காங்கிரஸும் அவரது கட்டுப்பாட்டுக்கு வரும் என்பது அவரது ஆதரவாளர்கள் கணக்கு. இந்த தருணத்திலும் கூட அசோக் கெலாட் ஆடுகிற கண்ணாமூச்சி ஆட்டம்தான் பைலட் ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.
அடுத்த முதல்வர் யார்?
அசோக் கெலாட்டை பொறுத்தவரையில் நானே முதல்வராகவும் நீடிப்பேன் என்றாலும் அதை பெரும்பாலானோர் ஏற்கவில்லை. அதனால் ஒருவேளை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக தாம் வெற்றி பெற்றால் தமக்குப் பதிலாக சபாநாயகர் சிபி ஜோஷ்டியை ராஜஸ்தான் மாநில முதல்வராக்க வேண்டும் என பரிந்துரைத்திருக்கிறாராம் கெலாட். இந்த பரிந்துரையால் பைல்ட் ஆதரவாளர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனராம்.
காலம் தீர்மானிக்கட்டுமே..
இது தொடர்பாக அசோக் கெலாட் கூறுகையில், பாசிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் நான் முன்னணியில் இருப்பேன். நான் ஒரு பதவியில் இருப்பதா? 3 பதவியில் இருப்பதா? என்பதெல்லாம் என் கவலையே கிடையாது. நான் எந்தப் பதவியில் இருப்பேன்; இருக்க வேண்டும் என்பதை காலம்தான் தீர்மானிக்கும். என் முடிவுகள் அனைத்துமே கட்சியின் நன்மைக்கானவை மட்டும்தான் என தெரிவித்துள்ளார்.