ஜவுளி பூங்கா அமைக்கவேண்டும் திருவள்ளூர் கலெக்டரிடம் எஸ்.சந்திரன் எம்எல்ஏ மனு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் திருவள்ளூர் கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது;
திருத்தணி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அம்மையார்குப்பம், பொதட்டூர்பேட்டை, சொரக்காப்பேட்டை, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, ஸ்ரீகாளிகாபுரம், வங்கனூர், அத்திமாஞ்சேரிபேட்டை மற்றும் மத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்துவரும் 2 லட்சத்துக்கும் அதிகமான நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வசதிகளும் நிறைந்த ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்கப்பட வேண்டும்.

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள ஆர்.கே.பேட்டை பகுதியில் படித்த இளைஞர்களின் வசதிக்காக புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் வகையில் சிப்காட் வணிக வளாகம் அமைக்க வேண்டும்.விவசாயிகள் பயன்பெறும் வகையில் கொல்லாலகுப்பம் ஊராட்சியில் வறட்சியை போக்க கெவிகுண்டு மலை மற்றும் சாரபாறை மலை அடிவாரத்தில் அணை கட்டவேண்டும்.  ஆர்.கே.பேட்டையில் பணிமனையுடன் இணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும். பள்ளிப்பட்டு ஒன்றியம், சங்கீதகுப்பம் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே  தடுப்பணை அமைக்கப்பட வேண்டும்.

கடந்தாண்டு பெய்த கன மழையின்போது அம்மம்பள்ளி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீரால் நெடியம் கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்று தரைப்பாலம் சேதம் அடைந்தது. இதனால் இந்த தரைப்பாலத்தை கடந்து செல்ல முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். நெடியம் கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்று தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக கட்டித்தர வேண்டும்.

ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் வேணுகோபாலபுரம் ஏரியை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி, ஏரி நீர் வெளியேற மதகுகளை சீரமைத்து தரவேண்டும். பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் ஏழை, எளிய மாணவிகள் பிளஸ் 2 முடித்த பிறகு உயர் கல்வி பயில கல்லூரி இல்லாததால் வேலைக்கு செல்லும் சூழ்நிலை உள்ளது. இதனால் மாணவிகளின் உயர் கல்விக்கு வழிவகுக்கும் வகையில் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும்.

பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையை அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். குமரராஜுபேட்டை முதல் சொரக்காய்பேட்டை வரை உள்ள சாலையை விரிவுபடுத்தி தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.