போண்டா மணியின் மருத்துவ செலவு – முழுமையாக ஏற்றது அரசு

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் போண்டாமணி. இவர் ஈழத்தை பூர்விகமாகக் கொண்டவர். சினிமா துறையில் சாதிக்க நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு நகைச்சுவை உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்டார். விவேக், வடிவேலுவின் நகைச்சுவைப் பட்டாளத்தில் ஒருவரான இவர் பல படங்களில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். குறிப்பாக, மருதமலை படத்தில் வடிவேலுவுடன் இவர் வரும் காட்சி இன்றளவும் பலரால் ரசிக்கப்படுகிறது. இந்தச் சூழலில்  நடிகர் போண்டா மணி இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிறுநீரக பிரிவில் டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சிகிச்சை பெற்று வரும் போண்டா மணியை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த விவரங்களையும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதனையடுத்து போண்டா மணியின் மருத்துவ செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என தெரிவித்தார். 

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் போண்டாமணி அவர்களை சந்தித்து அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்து அதற்கானமுழு செலவையும்முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுதிட்டத்தின் மூலம் ஏற்க்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது” என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் போன் மூலம் தொடர்புகொண்டு போண்டாமணியை நலம் விசாரித்து அவருக்கு தேவையான உதவியை செய்து வருகிறார். இது பற்றி அவர் கூறியதாவது, தகவல் கேள்விபட்டவுடன் நான் மருத்துவர் பக்தவத்சலத்துடன் பேசினேன். போண்டா மணிக்கு என்ன தேவையோ அதை செய்ய இருக்கிறேன்.

அதன்படி தற்போது அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. சனிக்கிழமை அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக மருத்துவர் பக்தவத்சலம் கூறினார். முதற்கட்டமாக போண்ட மணியின் அன்றாடத் தேவைக்கு வேண்டிய பண உதவியை என்னுடைய மனிதநேய மன்றத்திலிருந்து செய்திருக்கிறேன். இன்னும் அவருக்கு வேண்டிய உதவிகளை செய்வேன்” என கூறியிருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.