“இப்படியெல்லாம் இருந்தால் விமர்சனம் வரும்தானே?”- வெந்து தணிந்தது காடு ஒரு எக்ஸ்ரே பார்வை!

நடிகர் சிலம்பரசனின் சிறப்பான நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 15 ஆம்தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன வெந்து தணிந்தது காடு திரைப்படம் குறித்து சமூக வலைதளங்கள் உட்பட பல தளங்களில் இரண்டு விதமான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. வழக்கத்தை விட கூடுதலாகவே இயக்குநர் கௌதம் மேனன் திரைப்படம் பேசுபொருளாகியுள்ளது. இந்த நிலையில்தான் வெந்து தணிந்தது காடு படம் தொடர்பாக இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தொடர்ச்சியாக நேர்காணல்கள் கொடுத்து வருகிறார். அந்த நேர்காணல்களில் படம் தொடர்பாக முன் வைக்கப்பட்டு வரும் விமர்சனங்கள் குறித்து கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன. அதற்கு, வெறுப்பூட்டக்கூடிய சில விமர்சன முறைகளை அவர் சுட்டிக்காட்டியதோடு, எதுவாக இருந்தாலும் கொஞ்சம் நிதானமாக எடுத்துச் சொல்லுமாறு வலியுறுத்துகிறார். இயக்குநரின் இந்த வலியுறுத்தல் நியாயமானவே. அதேபோல், திரைப்படம் குறித்து நியாயமான விமர்சனங்கள் முன் வைக்கப்படுவதும் இன்றியமையாத தேவையாகவும், ஆக்கப்பூர்வமான ஒன்றாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துக்கள் கௌதம் மேனன்!!

உண்மையில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் எடுத்துள்ள முயற்சி என்பது பாராட்டுக்குறியதே. ஒரு எழுத்தாளரின் கதையை படமாக்க நினைத்த அவரது முடிவே வரவேற்புக்குரியது. ஒரு ஹீரோவுக்கு உரிய அம்சங்களை கூடுமானவரை அவர் இல்லாமல் கதாபாத்திரத்திற்கு தகுந்தாற்போல் படமாக்க முயற்சித்தது போற்றுதலுக்குரியது. மின்னலே தொடங்கி எனை நோக்கி பாயும் தோட்டா வரை அவர் உருவாக்கிய நாயகர்களில் இருந்து முத்துவீரன் நிச்சயம் வித்தாசமானவன். முத்துவீரன்களின் வாழ்க்கை படமாவது வரவேற்கத்தக்கது. படமாக எடுக்கப்பட்ட விதத்தில் சிக்கல்கள் இருப்பினும் இத்தகைய முயற்சிய வரவேற்க வேண்டிய சினிமா ஆர்வலர்களின் கடமை.

செங்காட்டில் தொடங்கிய கதை:

படத்தின் முதல் காட்சியில் வரும் தபால்காரருக்கும், முத்துவீரனுக்கும் இடையிலான உரையாடலே நிறைய விஷயங்களை நமக்கு கடத்தி ஆர்வத்தை தூண்டிவிடுகிறது. அதாவது, டிகிரிவரை படித்துவிட்டு வேலை வாய்ப்புக்காக முத்துவீரன் காத்திருப்பதையும், பணம் கொடுத்தால்தான் வேலை கிடைக்கும் என்ற நிலையும் இருப்பதை அந்தக் காட்சி சொல்லிவிடுகிறது. அந்த செங்காட்டின் புழுதியை நமக்கும் கடத்தி விடுகிறார்கள். ‘நான் நெருப்பில் இருந்து வரேன்.. அப்ப நாங்க மட்டும் எங்க இருக்கோம்’.. ‘50 வயசு வரைக்குமாவது வாழணும்னு ஆசையா இருக்கு’, ‘இங்க முன்னாடி போறதுக்கு தான் பாதை இருக்கு.. பின்னாடி திரும்பி பார்க்க முடியாது’ ‘நீ ரொம்ப விளிம்புல இருக்க.. ரொம்ப நாளா அப்படிதான் இருக்கேன்’ இந்த வசனங்கள் எல்லாம் அந்த வாழ்வியலின் அழுத்தத்தை வெளிப்படுத்தியது.

ஆனால்… ஒரு அழகான களத்தில் இருந்து கதை ஆரம்பித்தாலும் அந்த பயணம் நமக்கும் ஒட்டியும் ஒட்டாமலுமே சென்று இறுதியில் அதே நெருடலுடன் படமும் முடிந்துவிடுவதுதான் கவலையான ஒன்று. எல்லா வாய்ப்புகள் இருந்தும் படத்தின் காட்சிகளை நேர்த்தியாகவும், அழுத்தமாகவும் எடுக்காமல் எப்படி இயக்குநர் கோட்டைவிட்டார் என தெரியவில்லை. இயக்குநர் எதையெல்லாம் கோட்டைவிட்டார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

image

என்னதான் பிரச்னை?!

உண்மையில் படத்தில் என்னதான் பிரச்னை என்பதை பார்க்கலாம். எல்லோரும் சொல்வது போல் நிச்சயம் படத்தில் நீளம் பிரச்னையே இல்லை. மூன்று மணி நேரத்திற்கு மேல் இருந்த பல திரைப்படங்களை மக்கள் வரவேற்றுள்ளார்கள். வலுவில்லாத திரைக்கதையும், அழுத்தமான காட்சிகளே இல்லாமல் படத்தை எடுத்து வைத்துள்ளதும்தான் பிரச்னை. உதாரணத்திற்கு உணர்வுபூர்வமான மிகவும் அழுத்தமாக வந்திருக்க வேண்டிய ஒரு காட்சியை எப்படி வீணடித்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

முத்துவீரன் அந்த நட்சத்திர ஹோட்டலில் இருக்கும் போதும் திடீரென அங்கு பாவை (படத்தில் கதாநாயகியின் பெயர்) வருகிறார். முதலில் முத்துவீரனைத்தான் பார்க்க வருகிறாள் என்று நமக்கு தோன்றியது. ஏனெனில் முதல் காட்சியில் இசக்கி பரோட்டா கடைக்கு அவள் சென்று அவனை தேடுவது போல் காட்சி அமைந்திருக்கும். அதனால், அங்கிருப்பவர்களிடம் விசாரித்துவிட்டு இங்கேயே வந்துவிட்டார் போல என்று நினைக்கத் தோன்றியது.

image

ஆனால், அவளோ மிகவும் அதிர்ச்சியான ஒரு விஷயத்தை அப்பெண் சொல்வார். தன்னுடைய முதலாளி கட்டாயப்படுத்தி அழைத்ததாகவும் அப்படி செய்ய மறுத்தால் வேலை பறிபோய்விடும் தன்னுடைய தகப்பன் வேறு யாருக்காவது விற்றுவிடுவான்; அதற்கு இதுவே பரவாயில்லை என்று சொல்வாள். இது எப்படியான சூழ்நிலை.

image

அத்தகைய சூழலில் ஒரு காதலன் காதலியையும், ஒரு காதலி காதலனையும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்வது என்பது தாங்கிக் கொள்ள முடியாத வேதனையின் உச்சம். ஆனால், அந்த உணர்வுகள் நமக்கு கடத்தப்பட்டிருக்காது. நான் இருக்கும்போது ஏன் இப்படி முடிவு எடுத்தாய் என அவன் கேட்கிறான். பரோட்டா கடைக்கும் சென்று காத்திருந்ததை அவள் சொல்கிறாள். ஆனால், இவையெல்லாம் நமக்கு அந்த காட்சியை ஜஸ்டிபை செய்யவில்லை. இந்த முடிவை எடுப்பதற்கு முன்பு பாவை அடைந்த மன வேதனையை உரையாடல் இல்லாமலேயே சில ஷாட்களை மட்டுமே வைத்துக்கொண்டு காட்டியிருக்கலாம்.

image

காட்சிகள் வேக வேகமாகவே நகர்கிறது. காரணத்தை சொல்கிறார்கள். ஆனால், அவை உணர்வு பூர்வமாக கடத்தப்படாதது நம் மனதில் அந்த காட்சிகள் நில்லாமல் போவதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது. தமிழ் எம்.ஏ படத்தில் இதேபோன்றதொரு காட்சி வரும் அதில் ஹீரோ கதாபாத்திரம் ‘தேவதையாக பார்த்தவளை…’ என்று கூறும் வசனம் நமக்கு அந்த வலியை கடத்தும். அதாவது அவளுக்கு தவிர்க்கவே முடியாத சூழலில்தான் மனதிற்கு பிடிக்காத துயரமாக அந்த முடிவினை எடுக்கிறாள் என்பதை அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும். சரி அந்த ஹோட்டலில் இருந்து பாவையை மீட்ட பிறகாவது சற்றே இளைப்பாறி அந்த வேதனையை இருவரும் வெளிப்படுத்தி இருக்கலாம். அதற்கு பாவையின் வீட்டில் நடக்கும் காட்சிகள் மிகவும் நகைச்சுவையாகவே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த அழுத்தமான காட்சியை உடனே ட்ரை செய்துவிடுகிறது.

image

இந்த காட்சி ஒரு உதாரணம் தான். இன்னும் நிறைய சொல்லலாம். ஊரில் இருந்து தவிர்க்கவே முடியாத காரணத்தினால் தான் முத்துவீரன் மும்பை நோக்கி பயணப்படுகிறான் என்பதை அழுத்தமாக சொல்லவில்லை. கதைப்படி அவன் மும்பைக்கு சென்றாக வேண்டும் என்ற அவசரத்தில் சில காட்சிகளிலேயே அவனும் மும்பை செல்கிறான். அந்த சில காட்சிகளிலேயே சேர்மதுரை தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்கிறார். அழுத்தம் காரணமாகத்தான் அவர் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார் என்பதை நியாயப்படுத்துவதற்கான காட்சிகள் வைக்கப்படவில்லை.

ஒரே ஒரு காட்சியில் மட்டும் ’நாம் சந்தேகப்பட்டோம் அவர் வாழ்க்கையை முடிச்சிக்கிட்டார்’ என்று முத்துவீரனை சேர்த்துக் கொள்வதற்கு முன்பு பெரிய ரவுடி சொல்வார். இன்னும் கூடுதலாக சில காட்சிகளை வைத்திருக்கலாம். அதாவது கிராமத்து போர்ஷனில் இன்னும் அழுத்தமான களத்தை அமைத்து இருக்கலாம்.

இந்த காட்சிகளுக்கும் கொஞ்சம் நியாயம் சேர்த்திருக்கலாம்:

அப்புக்குட்டி கதாபாத்திரத்திற்கு கடைசியில் கொடுத்த ட்விஸ்ட் உண்மையில் ஏற்றுக் கொள்ளும்படியாகவே இல்லை. ஒரு கதாபாத்திரத்தில் ஏற்படும் மாற்றங்களை நம்ப வைப்பதற்கு குறைந்தபட்சம் சில காட்சிகள் தேவை. நாமாக எல்லாவற்றையும் யூகித்துக் கொள்வதற்கு காட்சிகள் இருக்கிறது. ஆனால், உணர்வதற்கு காட்சிகள் இல்லை.

image

முத்துவீரன் தான் பெரிய அண்ணாச்சியை கொலை செய்தான் என்ற கோபத்தில் இசக்கி புரோட்டா கடையில் இருக்கும் கர்ச்சீப் துண்டு போட்ட அந்த அண்ணாச்சி ஆட்களை திரட்டிக் கொண்டு முத்துவீரன் வீட்டிற்கு வருகிறார். கையில் துப்பாக்கி உடன் அவர்கள் எல்லோரும் அந்த வீட்டிற்குள் நுழைகிறார்கள். ஆனால், அவர் தன் தோளில் இருக்கும் கர்ச்சீப்பை எடுக்கவே இல்லை. அப்படியே தான் இருக்கிறது. துப்பாக்கியுடன் சண்டைக்கு செல்லும் ஒருவர் எப்படி கர்ச்சீப் தோளில் போட்டுக் செல்வார். இது மிகவும் கடுப்பான காட்சி. நகைச்சுயாகத்தான் இருந்தது.

படத்தில் அந்த சிறையில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது என்ற தொணியிலேயே எல்லா கதாபாத்திரமும் சொல்லிக் கொண்டே இருக்கிறது. ஆனால், அவர்கள் சுதந்திரமாக சுற்றிக் கொண்டே தான் இருக்கிறார்கள். வேறு வழியே இல்லாமல் அவர்கள் அங்கு இருக்கிறார்கள் என்ற அந்த நெருக்கடி நிலைமையை நமக்கு கடத்தவில்லை.

image

இது கொஞ்சம் தெளிவாக இருந்திருக்கலாம்:

படத்தில் சேர்மதுரை அண்ணாச்சிக்கும் முத்துவீரனின் அம்மாவுக்கும் (ராதிகா) என்ன உறவு என்பது தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டிருக்காது. முதல் முறையாக சேர்மதுரை வீட்டிற்கு செல்லும் ராதிகா அவரிடம் பேசும் அணுகுமுறையை பார்க்கும் போது, நம்மால் இருவருக்கும் இடையிலான உறவை கணிக்கவே முடியவில்லை. ஒரே ஊர் காரர்களா, சொந்தக் காரர்களா என்பது தெளிவுபடுத்தவே இல்லை. மும்பையில் இசக்கி புரோட்டா கடையில் இருக்கும் அண்ணாச்சி முத்துவீரனிடம் ஒருமுறைக்கு இரண்டு முறை உங்களுக்கு சேர்மதுரை அண்ணாச்சி என்ன உறவு வேண்டும் என்று கேட்பார். அப்போது முத்துவீரன் மாமா வேண்டும் என்றே சொல்லுவான். அவரோ நம்பாதது போல் சந்தேக தொணியிலே கேட்பார். எப்படி கேட்காமல் விட்டார்?

4 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பிக் கொண்டிருந்த தன் மகன் திடீரென 25 ஆயிரம் ரூபாய் அனுப்புகிறான். ஆனால், எப்படி திடீரென இவ்வளவு பணம் வந்திருக்கிறது என்பது குறித்து முத்துவீரனிடம் அவள் கேட்பது போல் எந்த காட்சியும் இருக்காது. பாவை எப்படி முத்துவீரனிடம் கேட்கும் போது ஒரு நியாயம் இருக்கிறது என நமக்கு தோன்றுகிறதோ அதே போல் ராதிகாவிற்கும் ஒரு காட்சி வைத்திருக்கலாம்.

image

எந்த அளவிற்கு படத்தை நுணுக்கமாக எடுத்திருக்கிறார்கள்?

படத்தில் நிறைய சிக்கல்கள் இருந்தாலும் சில விஷயங்களை நுணுக்கமாவே கையாண்டு இருக்கிறார்கள். ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தை ரியாலிட்டி தன்மை விட்டுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என மிகவும் முனைப்பாக காட்சிகளை படமாக்கி இருக்கிறார்கள். அதற்கு எடுத்துக் காட்டாக, முத்து வீரன் கதாபாத்திரத்தின் முதுகெல்லாம் நெறிஞ்சி முள் குத்தி காயம் ஆகி இருக்கும். அவனது சொந்த கிராமத்தில் காயம் ஆகி இருக்கும். அதன் பிறகு சேர்மதுரை (பவா செல்லதுரை) வீட்டிற்கு செல்லுவான், மும்பை சென்று எசக்கி புரோட்டா கடையில் சேர்ந்து அங்கு வாழ ஆரம்பிப்பான். இந்த எல்லா காட்சிகளிலும் முத்து வீரனின் உடல் மொழியை கவனித்தால் ஒரு விஷயம் நன்கு புரியும். முள் குத்திய காயம் என்பது உடனே ஆறிவிடாது. அது சில நாட்களாவது ஆகும். காயத்தால் உடலில் ஏற்படும் அசௌகரியங்கள் அடுத்த காட்சிகளில் சிம்பு வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார். தரையில் படுக்கும் போது கூட அதை அழகாக காட்சிப் படுத்தி இருப்பார்கள்.

image

முத்துவீரன் தன் தங்கை மீதும் குடும்பத்தின் மீதும் எவ்வளவு பாசம் வைத்திருப்பான் என்பதை இரண்டு காட்சிகளில் காட்டியிருப்பார் இயக்குநர். ஒரு காட்சியில் சேர்மதுரை வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். அப்பொழுது கறிக் கொழம்பு சாப்பாடு. கறியை பார்த்ததும் தங்கை கதாபாத்திரம் ஆசையாக அண்ணனிடம் சொல்லும். நல்லா சாப்பிடு என்று சொல்லிவிட்டு தன் இலையில் இருந்த கறியை தங்கையின் இலையில் எடுத்து வைப்பான். இது கிராமங்கள் இயல்பாக நடக்கும் விஷயம். அன்பின் வெளிப்பாடு. இன்னொரு காட்சியில் ராதிகாவின் மடியில் அண்ணன், தங்கை இருவரும் ஆளுக்கு ஒருபுறம் தலைவைத்து படுத்திருப்பார்கள். தாயின் மடியில் தலை வைத்து தூங்குவது ஒரு தனி சுகம்தான். இதெல்லாம் இயல்பான காட்சிகள்.

image

படத்தை இரண்டு விஷயங்கள் தாங்கி செல்கிறது. ஒன்று முத்துவீரன் கதாபாத்திரத்தில் சிம்பு வாழ்ந்திருப்பது. மற்றொன்று பாடல்களும், இசையும். ஒரு பாட்டிற்கு முன்பே அந்த மூடை அழகாக கடத்தியிருப்பார் ரஹ்மான். மல்லிப்பூ பாடல் வருவதற்கு முன்பே அதன் பின்னணி இசை வந்துவிடும். உன்ன நினைச்சதும் பாடலின் பின்னணி இசை தொடக்கத்தில் இருந்தே இருவரும் சந்திக்கும் போது வரும். இவையெல்லாம் அந்த மூடை நமக்குள் கொண்டுவந்துவிடும். அந்த மூட் தான் படத்துடன் நம்மை பயணிக்க வைக்கிறது. 

கௌதம் மேனனின் பழைய சாயல்கள் எதுவும் இல்லாமல் இருந்தது படத்தை புதிய கலரை கொடுத்திருந்தது. கதையின் பிளாட் இயல்பாக கொண்டு சென்றவிதமும் நன்றாகவே இருந்தது. ஆனால், காட்சிகளை அழுத்தமாக அமைக்காதது தான் பெரிய அளவில் வெற்றியாக அமையாததற்கு காரணமாக அமைந்துவிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.