செல்போன் டவர் அமைத்து தருகிறோம், முதலீடு செய்த பணத்தை பணத்தை இரட்டிப்பாக தருகிறோம், ரியல் எஸ்டேட்டில் குறைந்த விலையில் வீட்டுமனை தருகிறோம், மத்திய அரசின் வேலை வாங்கித் தருகிறோம்,இப்படி பல முகங்களை கொண்ட ஏமாற்று பேர்வழிகள் இருக்கும் நிலையில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தற்போது வரை புகார் கொடுத்தவர்களுக்கு உரிய பணம் போய் சேர்ந்ததா சேரவில்லையா என்பது கேள்விக்குறியே.
தற்போது அரசு மருத்துவமனைகளில் எலக்ட்ரிஷன், துப்புரவு தொழில், செவிலியர் பணி, கணினி உதவியாளர் கணினி ஆபரேட்டர், தூய்மை பணி கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்கு தல 42 ஆயிரம் வசூல் செய்து 40க்கும் அதிகமான நபர்களை ஏமாற்றியுள்ளனர். அப்படி, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த ஜோஸ்பின் ஒப்பந்த அடிப்படையில் வேலை முடிந்த பிறகு மீண்டும் பணி கிடைக்க காத்திருந்துள்ளார், இந்நிலையில் அவருக்கு அறிமுகமான நபர்கள் பணம் கொடுத்தால் வேலை கிடைக்கும் என்று கூறியதாக கூறப்படுகிறது இதை அறிந்த ஜோஸ்பின் மற்றும் அவருடன் சேர்ந்த 28 நபர்களிடம் தலா 42 ஆயிரம் என மொத்தம் 11,76,000 ரூபாய் ரொக்க பணத்தை ஜெயக்குமார் என்பவரிடம் கொடுத்துள்ளார்,
ஜெயக்குமார் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவாக திருச்சியில் உள்ள தனியார் உணவகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பெயரில் பேனர் அச்சடித்து கடந்த 2021ஆம் ஆண்டு நேர்முகத் தேர்வு நடத்தியுள்ளனர்.இந்த தேர்வில் 40க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர். பணம் கொடுத்து நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டவர்கள் ஒரு வருட காலம் ஆகியும், சொன்னபடி அரசு வேலை கிடைக்காததால் ஜெயக்குமாரை தொடர்பு கொண்ட போது, உங்களுக்கு இன்னும் காலதாமதம் ஆகும் இல்லையென்றால் பணத்தை திருப்பி பெற்றுக் கொள்ளுங்கள் என கூறியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூறியும் அவரிடமிருந்து பணத்தை பெற்று தரக்கூறி கும்பகோணம்,திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தஞ்சை துணை கண்காணிப்பாளர் அலுவலகம்,என பல்வேறு இடங்களில் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தமிழக முதல்வர் தனி பிரிவுக்கும் இந்த புகார் மனு அனுப்பப்பட்டது. தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்ட புகார் மனு தொடர்பாக திருச்சி கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது..
அங்கு வந்த ஜோஸ்பின் மற்றும் செபாஸ்டின் கூறுகையில், “கும்பகோணம் மாவட்டம் வடகரை பகுதியை சேர்ந்த ஜஸ்டின் என்பவர் கடந்த 2021 நவம்பர் மாதம் தங்களிடம் சுகாதார துறையில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி தலா 42 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 28 பேரிடம் வசூல் செய்து சென்னையில் இருந்து நேரடியாக அவர்களுக்கு ஆணை வழங்க உள்ளோம் என்றார். அதன் அடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதம் திருச்சியில் உள்ள தனியார் உணவகத்தில் நேரடி நேர்முக தேர்வு நடத்தினார்கள்.
மொத்தம் 42 பேர் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர் அதில் 28 பேர் என் மூலம் அழைத்து வரப்பட்டவர்கள் என்று கூறினார். கடந்த ஆகஸ்ட் மாதம் வரை வேலை வாங்கித் தருவதாக கூறி தொடர்ந்து எங்களை அலைக்கழித்தனர். அதன் பிறகு வேலை கிடைக்காததால் பணத்தை திருப்பி கேட்ட பொழுது தங்களை ஆள் வைத்து மிரட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினார்கள்.
ஏற்கனவே அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தவர்களை நிரந்தரம் செய்வதற்காகத்தான் இந்த பணம் வழங்கப்படுவதாக கூறி எங்களை ஏமாற்றினார்கள். கடந்த மாதம் நாங்கள் பணத்தை திருப்பி கேட்டபோது நான் நேரடியாக அமைச்சரை சந்தித்து பணி ஆணை பெற்று வருவதாகவும் இல்லையென்றால் 8ஆம் தேதி பணத்தை திருப்பி தருவதாகவும் கூறியிருந்தார். ஆனால் இதுவரை பணம் திருப்பி வரவில்லை. எங்களை ஏமாற்றிய இருவரும் விசாரணைக்காக திருச்சிக்கு வந்ததால் நாங்கள் இன்று திருச்சி கண்டோன்மென்ட் நிலையத்திற்கு வந்துள்ளோம்” என்றனர்.