“தேசத்திற்கே வழிகாட்டியாக திகழ்கிறது காவேரி கூக்குரல் இயக்கம்” – பொள்ளாச்சி எம்.பி

சென்னை: ‘காவேரி கூக்குரல் இயக்கம் தேசத்திற்கே வழிகாட்டியாக திகழ்கிறது’ என்று பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் பாராட்டியதாக ஈஷா அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கோவை ஈஷா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: பசுமை தொண்டாமுத்தூர் திட்டத்தின் கீழ் 1 லட்சம் மரக்கன்றுகளை நடும் பணியின் நிறைவு விழா கோவை மத்திபாளையத்தில் இன்று (செப்டம்பர் 22) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பொள்ளாச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் விழாவில் பேசியது: “விவசாய நிலங்களுக்காகவும், தொழிற்சாலைகளை அமைப்பதற்காகவும் உலகளவில் காடுகளை அழிக்கும் துயரம் நிகழ்ந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒன்றரை கோடி ஹெக்டேர் முதல் 1.8 கோடி ஹெக்டர் வரை காடுகள் அழிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வினாடியும் 2,400 மரங்கள் வெட்டப்படுகின்றன. இதனால் பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் வாழ்வியல் மாற்றங்களையும் நாம் சந்தித்து வருகிறோம்.

இதை கருத்தில் கொண்டு, எல்லா நாடுகளும் தங்களுடைய நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் குறைந்தப்பட்சம் 33 சதவீதம் பசுமை பரப்பை பேண வேண்டும் என ஐ.நா வலியுறுத்தி உள்ளது. ஆனால், பல ஆண்டுகளாக முயற்சித்தும் நம்மால் அந்த இலக்கை இன்னும் அடையவில்லை.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்ட புள்ளி விவரத்தின் படி, இந்தியாவில் 21.71 சதவீதம் மட்டுமே பசுமை பரப்பு உள்ளது. கடந்த ஆண்டுகளின் புள்ளி விவரங்களை ஒப்பிடுகையில் ஆண்டுக்கு சராசரியாக 0.04 சதவீதம் மட்டுமே பசுமை பரப்பு அதிகரித்து கொண்டு இருக்கிறது. சாலை விரிவாக்கத்திற்கு வெட்டப்படும் ஒரு மரத்திற்கு 10 மரங்களை நட வேண்டும் என சட்டம் உள்ளது. அதை செயல்படுத்துவதிற்கே நெடுஞ்சாலைத் துறை பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், காவேரி கூக்குரல் இயக்கமும், ரோட்டரி சங்கமும் இணைந்து தொண்டாமுத்தூரில் விவசாய நிலங்களில் வெறும் இரண்டே மாதங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு இருப்பது பாராட்டுக்குரியது. இதன்மூலம், காவேரி கூக்குரல் இயக்கம் தேசத்திற்கே முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்கிறது. இத்திட்டத்தை தொண்டாமுத்தூர் மட்டுமின்றி கோவை மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும்” என்று அவர் அவர் பேசினார்.

விழாவின் ஒரு பகுதியாக, விவசாயி காந்தி பிரகாஷின் நிலத்தில் டிம்பர் மரக்கன்றுகள் நடும் நிகழ்வும் நடைபெற்றது. இதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவிகள் மற்றும் ஈஷா தன்னார்வலர்கள் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.