பெய்ஜிங்: ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சீன அமைச்சருக்கு மிகவும் கடுமையான தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.
நம்ம ஊரில் ஊழல் வழக்கில் தண்டிக்கப்படும் அரசியல்வாதிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஊழல் வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது மிகக் குறைவாக உள்ளதே ஊழல் அதிகரிக்கவும் ஒரு காரணமாக இருக்கிறது.
இதனால் ஊழல் குற்றச்சாட்டுகள் உறுதியானால் அரசியல்வாதிகளுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோஷமும் எழுந்துள்ளது. வெளிநாடுகளில் ஊழல் புகார் உறுதியாகும் நபர்களுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.
சீன முன்னாள் அமைச்சர்
இந்நிலையில், சீனாவில் ஊழல் அரசியல்வாதிக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை பலரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது. சீனாவில் பெய்ஜிங் நகராட்சி பொது பாதுகாப்பு பணியகத்தின் தலைவராகவும், பொது பாதுகாப்பு துணை அமைச்சராகவும் பணியாற்றியவர் ஃபூ ஜெங்குவா. துணை அமைச்சராக இருந்த ஃபூ, சீனாவின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி மற்றும் நாட்டின் உயர்மட்ட முடிவெடுக்கும் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ நிலைக்குழுவில் உறுப்பினராக இருந்து ஜோ யோன்காங் மீதான உயர்மட்ட ஊழல் விசாரணையின் பொறுப்பாளராகவும் இருந்தார்.
ஊழல் வழக்கு
2015ஆம் ஆண்டு ஊழல் வழக்கில் ஜோவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் ஃபூ ஜெங்குவா, சட்டத்துறை அமைச்சர் ஆனார். சீனாவில் முக்கிய நட்சத்திரமாக வளம் வந்த அவர் 2021இல் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கினார். ஃபூ ஜெங்குவா லஞ்சம் வாங்கியதாகவும், தனிப்பட்ட ஆதாயங்களுக்காகச் சட்டத்தை வளைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார். சக்திவாய்ந்த பதவியில் இருந்த ஃபூ ஜெங்குவா, பிஸ்னஸ் நிறுவனங்களுக்கு உதவ லஞ்சம் பெற்றதாகக் கூறப்பட்டது.
குற்றச்சாட்டு
அவர் சட்டவிரோதமாக “117 மில்லியன் யுவான் ($17.3 மில்லியன்) மதிப்புள்ள பணம் மற்றும் பரிசுகளை நேரடியாகவோ அல்லது அவரது உறவினர்கள் மூலமாகவோ பெற்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த ஜூலை மாதம் நீதிமன்றத்தில் தொடங்கியது. அரசின் பல சட்டங்களை மீறியதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
3 மாதங்களில்
சில அமைச்சர்களுடன் சேர்ந்து கொண்டு லஞ்சம் வாங்கியதாகவும் பங்குச் சந்தையில் முறைகேடு செய்ததாகவும் புகார் முன்வைக்கப்பட்டது. மேலும், சட்ட விரோதமாக அவர் துப்பாக்கி வைத்து இருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. ஊழல் வழக்கு விசாரணை அங்கு மளமளவென நடந்துள்ளது. வெறும் 3 மாதங்களில் ஒட்டுமொத்த விசாரணையும் முடிந்துள்ளது. நீதிமன்றத்தில் தனது இறுதி வாக்குமூலத்தில் ஃபூ குற்றத்தை ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்தார்.
மரண தண்டனை
விசாரணையில் அவர் லஞ்சம் வாங்கியதும் ஊழல் செய்ததும் உறுதியான நிலையில், அவருக்குக் கடந்த வியாழக்கிழமை மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இருப்பினும், தவறை ஒப்புக் கொண்ட ஃபூ தண்டையைக் குறைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் சற்று கருணை காட்டி உள்ளது.
சீன சட்டம்
சீனச் சட்டத்தின்படி, ஒரு மரண தண்டனையை விலக்கு அளிப்பது என்பது குற்றவாளியின் நடவடிக்கை பொறுத்தே இருக்கும். அதாவது குற்றவாளி இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவார், உள்ளே அவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பது பொறுத்து இரண்டு வருட காலத்திற்குப் பின்னர், அவரது தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படும்.