சென்னை: பதிவுத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் பல்வேறு சீர்திருத்தங்கள் நடவடிக்கைகளால் ஆவணங்கள் பதிவு அதிகரித்ததன் மூலம் அரசிற்கு வரி வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பதிவு செய்ய வருவோர் ஆதார் எண் மூலம் சரிபார்த்தல் வரிசை, கிராம டோக்கன் முறை, சரியான நில மதிப்பு நிர்ணயம், மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை போன்ற பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக பொதுமக்கள் பதிவு சேவைக்காக இத்துறையை நம்பிக்கையோடு நாடுகின்றனர். அனைத்திற்கும் மேலாக கடந்த காலங்களில் நடந்த மோசடி பதிவுகளின் மீது விரிவான விசாரணை மேற்கொண்டு போலி ஆவண பதிவுகளை பதிவுத்துறையே ரத்து செய்யும் அதிகாரம் நடைமுறைப்படுத்துவதை முதலமைச்சர் எதிர்வரும் 28 ஆம் தேதி துவக்கி வைக்க இருக்கிறார். இதுபோன்ற பல்வேறு முன்னோடி முயற்சிகளின் விளைவாக கடந்த 21 ஆம் தேதி வரை 16 லட்சத்து 59 ஆயிரத்து 128 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 882 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் இதே நாளில் எட்டப்பட்ட ரூபாய் 5757 கோடியை விட 2325 கோடி அதிகமாகும் என அமைச்சர் மூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களையும் ரத்து செய்யும் அதிகாரம் பதிவுத்துறைக்கு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்ட திருத்தம் வரலாற்று சிறப்பு எனவும், அதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாக வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கூறியிருந்தார்.
நில அபகரிப்பாளர்களிடமிருந்து மீட்டு சொத்துக்களை உரியவர்களுக்கு பெற்றுத் தரும் வரலாற்று சிறப்பு மிக்க இச்சட்ட திருத்தம் கொண்டு வர வழிகாட்டிய மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு நன்றி!!!
— P Moorthy (@pmoorthy21) August 12, 2022
முன்பு இருந்த சட்டத்தின்படி யாரவது ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணங்களை தந்து பதிவு செய்யப்பட்டால், அதனை ரத்து செய்யும் அதிகாரம் பதிவுத்துறைக்கு இல்லை. இதன் காரணமாகவே பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்த மசோதாவை தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட குடியரசு தலைவரின் ஒப்புதல் அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பின்னர் தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.