திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு பயன்படுத்தப்பட்ட மலர்களை கொண்டு கீ செயின், பேப்பர் வெயிட், காலண்டர் என 850 வகையான கலை பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இது பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் மற்றும் தேவஸ்தானத்தின் இதர கோயில்களில் சுவாமிக்கு பயன்படுத்தப்பட்ட பூக்களை வீணாக்காமல் இவற்றை கொண்டு உலர் மலர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கலை படைப்புகளை உருவாக்க டாக்டர் ஒய்எஸ்ஆர் தோட்ட பல்கலைக்கழகத்துடன் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் 13ம்தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அதன்படி திருப்பதி அடுத்த பேரூர் அருகே சிட்ரஸ் ஆராய்ச்சி நிலையத்தில் கடந்த 2021 ஆண்டு செப்டம்பர் 28ம்தேதி முதல் 350 சுய உதவிக்குழு பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வெங்கடேஸ்வர சுவாமி, பத்மாவதி தாயார் போட்டோ, பிரேம்கள், பேப்பர் வெயிட்கள், காலண்டர்கள், கீ செயின்கள் மற்றும் இதர பொருட்கள் என 850 வகையான கலை படைப்புகளை தயாரித்துள்ளனர். இவற்றின் மொத்தம் மதிப்பு ரூ.1 கோடியே 19 லட்சத்து 26 ஆயிரத்து 56 ஆகும்.
இவ்வாறு உருவான கலை பொருட்கள் கடந்த ஜனவரி 25ம்ததி முதல் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக திருமலை மற்றும் உள்ளூர் கோயில்கள், பெங்களூர், ஐதராபாத், விசாகப்பட்டினம், விஜயவாடா மற்றும் சென்னை தகவல் மையங்களில் சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேவஸ்தானத்தின் இந்த திட்டம் பக்தர்களிடம் தற்போது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் மற்றும் அமைச்சர்களும் இதற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.