மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான 95% பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், சர்வதேச விமான நிலையத்திற்கு தேவையான இடத்தை தமிழக அரசு ஒதுக்கவில்லை என்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். மதுரை மற்றும் காரைக்குடியில் பாஜக சார்பில் நடைபெறும் பல்வேறு அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக இன்று மதியம் ஜே.பி.நட்டா மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.
அங்கு அவருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனை தொடர்ந்து அவனியாபுரம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற பல்துறை தொழில் வல்லுனர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்று உரையாற்றினார். ஜே.பி.நட்டா பேசுகையில் “தமிழ் நிலம் கலாச்சாரத்தின் நிலம். தேச விடுதலையில் தமிழ் மக்களின் பங்கு அளப்பறியது. கடந்த 8 ஆண்டுகளாக பிரதமர் மோடி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது.
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற 550 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அதற்காக 633.17 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு கேட்ட நிலையில், தமிழக அரசு 543 ஏக்கர் நிலத்தை மட்டுமே கொடுத்துள்ளது.
இருந்தும் சர்வதேச விமான நிலையத்திற்கான பணிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்து உள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம் 1264 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக தொற்று நோய் பிரிவுக்காக 134 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
750 படுக்கைகள் மற்றும் ஐ.சி.யூ. வசதியுடன் கூடிய 250 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளன. மாணவர் சேர்க்கை இடங்களும் 100-ல் இருந்து 250 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமானம் நடைபெற்று அதை மோடி திறந்து வைப்பார்.” என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய பொது செயலாளர் சிடி.ரவி, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்துறை வல்லுநர்கள் பங்கேற்றனர்.