புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை ‘நாட்டின் தந்தை’ என அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இலியாசி புகழ்ந்துள்ளார்.
அகில இந்திய இமாம் அமைப்பு, இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுக்கான அமைப்பாக செயல்பட்டு வருகிறது. உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பாக அகில இந்திய இமாம் அமைப்பு கருதப்படுகிறது. இந்த அமைப்பின் தலைவரான உமர் அகமது இலியாசியின் அழைப்பை ஏற்று, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், டெல்லியில் அந்த அமைப்பு இயங்கி வரும் மசூதிக்குச் சென்றார்.
அவரோடு, ஆர்எஸ்எஸ் அமைப்பின் இணை பொதுச் செயலாளர் கிருஷ்ண கோபால், பாஜகவின் முன்னாள் அமைப்புச் செயலாளரான ராம் லால், முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் அமைப்பின் புரவலரான இந்தரேஷ் குமார் உள்ளிட்டோர் மசூதிக்குச் சென்றனர். வெளியாட்களை அனுமதிக்காமல் இருதரப்பினரும் சுமார் ஒரு மணி நேரம் மசூதியில் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
பின்னர் இந்தச் சந்திப்பு குறித்து தெரிவித்த உமர் அகமது இலியாசி, “எங்களது அழைப்பை ஏற்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், அகில இந்திய இமாம் அமைப்பின் அலுவலகத்திற்கு வருகை தந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் நமது நாட்டின் தந்தை. நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தாஜ்வீதுல் குரான் மதரசாவை அவர் பார்வையிட்டார். அங்கு கல்வி பயிலும் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது, நமது மரபணு ஒன்றுதான் என்றும், கடவுளை வழிபடும் முறைதான் வேறானது என்றும் மோகன் பாகவத் கூறினார்” எனத் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பு குறித்து தெரிவித்த உமர் அகமது இலியாசியின் சகோதரர் சுஹைப் இலியாசி, “எங்களின் தந்தையின் நினைவு தினத்தன்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வருகை தந்தது மிகப் பெரிய கவுரவம்; நாட்டிற்கு இது ஒரு நல்ல செய்தி” என குறிப்பிட்டார்.
நாட்டில் மத நல்லிணக்கம் அதிகரிக்க இஸ்லாமிய அறிஞர்களுடன் மோகன் பாகவத் சமீபத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் மன்னாள் தலைவர் ஜமீர் உத்தின் ஷா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாஹித் சித்திக், தொழிலதிபர் சயீத் ஷெர்வானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.